Saturday, February 22, 2014

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்--காருகுடி (திருச்சி மாவட்டம் )


அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்--காருகுடி (திருச்சி மாவட்டம் )

நட்சத்திர கோவில்கள்

நட்சத்திரம் : ரேவதி


ஸ்தல வரலாறு :

சந்திர பகவான், கடைசி நட்சத்திர தேவியான ரேவதியை மணந்தார். அவர்கள், சிவனையும், பார்வதியையும் தரிசிக்க விரும்பினர். இதையறிந்த அம்பிகை கருணை கொண்டு, இத்தலத்தில் சிவனுடன் காட்சி கொடுத்தாள். சிவனுக்கு கைலாசநாதர் என்றும், அம்பாளுக்கு கருணாகரவல்லி என்றும் பெயர் ஏற்பட்டது. கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் திருவாதிரையன்றும், ரேவதிநட்சத்திரத் தன்றும் இங்கு வருண பகவானுக்கு ஹோமம் செய்தால், மழை பெய்யும். தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் கிடைக்கு மென நம்புகிறார்கள். விவசாயிகளுக்குரிய கோயிலாக இது விளங்குகிறது.



ஸ்தல பெருமை :

சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி என்ற மன்னன் இக்கோயிலை புதிப்பித்து கட்டியுள்ளான். 1266ம் ஆண்டுகளில் கர்நாடக மன்னன்போசல வீரராமநாதன் என்பவன் இக்கோயில் பூஜைகள் தடையின்றி நடக்க நிறைய நிலங்களை தானம் செய்துள்ளான்.1541,1619 ம் ஆண்டுகளில் இக்கோயிலுக்காக ராமசக்கவர்த்தி எனும் மன்னன் நில தானம் செய்துள்ளான். இத்தலத்தின் அருகில் தொட்டியம், குணசீலம், திருஈங்கோய்மலை, உத்தமர் கோவில், திருநாராயணபுரம் ஆகிய திருத்தலங்கள் உள்ளது.




காசிக்கு அடுத்த காருகுடி என்பார்கள். இத்தலத்தின் கீழ் அசோக நட்சத்திரம் சுற்றுகிறது. ஊரிலிருந்து தள்ளி கோயில் அமைந்துள்ளதால், கோயிலுக்கு வருபவர்கள் குருக்களுக்கு போன் செய்து விட்டு வருவது சிறப்பு.

ரேவதி நட்சத்திர பலன்:
சந்திரனுக்கும் 27 நட்சத்திர தேவியருக்கும் சிவனும் , பார்வதியும் இத்தலத்தில் காட்சி கொடுத்தனர். இறைவனின் கருணையை எண்ணி ரேவதி மட்டும் தினமும் இங்கு வந்து பூஜை செய்வதாக கூறப்படுகிறது. எனவே ரேவதி என்ற பெயருடையவர்கள், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ இங்கு வந்து 27 என்ற எண்ணிக்கை வரும்படியான பொருட்களை ( 27 திருமாங்கல்ய சரடு, 27 ரவிக்கை துணிகள், 27 உணவுப்பொட்டலங்கள்) சிவனிடமும் அம்மனிடமும் சமர்ப்பித்து, கோயிலுக்கு வருபவர்களுக்கு கொடுத்தால் தடை பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். ரேவதி நட்சத்திரம் முடிந்து, அஸ்வினி நட்சத்திரம் தொடங்கும் முன்பாக உள்ள 12 நிமிடங்களின் போது சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.




 பொது தகவல்:
 
  ரேவதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: மனைவியின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பர். எல்லோரிடமும் இணக்கமாக நட்பு கொள்வர். தைரியமும், நேர்மையும் இவர்களின் சுபாவமாக இருக்கும். தன்னைப்பற்றி உயர்வாக நினைப்பர். சுக போகங்களில் நாட்டம் கொள்வர். எதிரிகளை வெல்லும் ஆற்றலைப் பெற்றிருப்பர். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காசி விசாலாட்சி, குங்குமவல்லி, அகோரவீரபத்திரர், கால பைரவர், கபால பைரவர், சூரியன், சந்திரன், நவகிரகம், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, கோமு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
 



பிரார்த்தனை
 
  ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். நீர் சம்பந்தமான நோய்கள், கண்சம்பந்தப்பட்ட நோய்கள், நாள்பட்ட நோய்கள் குணமாக இங்கு சிறப்பு அர்சசனை செய்யப்படுகிறது.




நேர்த்திக்கடன்:
 
  எந்த நட்சத்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இத்தல இறைவனை வணங்கி கோயிலை பிரதட்சணம் செய்தால் பாவங்கள் விலகும் என்பதும், சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.


கோவில் விவரங்கள் :

மூலவர்                            :                      கைலாசநாதர்

அம்மன்/தாயார்            :                     கருணாகர வல்லி

பழமை                                    :                     1000-2000 வருடங்களுக்கு முன்
 
ஊர்                                    :                     காருகுடி

மாவட்டம்                            :                    திருச்சி

மாநிலம்                            :                   தமிழ்நாடு





அமைவிடம் :

திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடிக்கு செல்ல வேண்டும் ....
   

Friday, February 21, 2014

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்- திருப்புகலூர் (திருவாரூர் மாவட்டம் )


அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்- திருப்புகலூர் (திருவாரூர் மாவட்டம் )

நட்சத்திர கோவில்கள்

நட்சத்திரம் : சதயம்


ஸ்தல வரலாறு :

அசுர வம்சத்தை சேர்ந்த பாணாசுரனின் தாயார் மாதினியார். இவள் ஒரு சிவபக்தை. தன் தாய் செய்யும் சிவபூஜைக்காக, அவள் இருக்கும் இடத்திற்கே தினமும் புதுப்புது லிங்கங்களை கொண்டு வந்து சேர்ப்பது பாணாசுரனின் வழக்கம். ஒருமுறை விண்ணில் பறந்த அவன், ஓரிடத்தில் ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில் ஒரு லிங்கத்தின் அமைப்பு அவனது கருத்தைக் கவர்ந்தது. இதைக் கொண்டு சென்றால், தனது தாயார் மிகவும் மகிழ்வாள் என்று கருதிய பாணாசுரன், லிங்கத்தை எடுத்தான். ஆனால், அது அசையவில்லை. லிங்கத்தைச் சுற்றிலும் அகழி தோண்டி பெயர்த்தெடுக்க முயன்றான். ஆனால், அகழியில் தண்ணீர் நிரம்பி, லிங்கத்தின் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இறைவா! இதென்ன சோதனை! என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நான் இனியும் உயிர் வாழ்ந்து பயனில்லை, எனச் சொல்லிவாளை எடுத்து தலையை அறுக்க முயன்றான். அப்போது அசரீரி ஒலித்தது. பாணாசுரனே! உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என்றது. உடனே லிங்கத்தின் உச்சியில் ஒரு புன்னை மலர் பறந்து வந்து அமர்ந்தது. உடனே மறைந்து விட்டது. அது மாதினியாரின் இருப்பிடத்திற்கே சென்றதும், மகிழ்ந்த அவள் பூஜை செய்தாள். பூஜை முடிந்ததும் திருப்புகலூருக்கே திரும்பி விட்டது. இப்படி, பக்தர்கள் இருக்குமிடத்திற்கு ஓடிவந்து அருள் செய்யும் இறைவனுக்கு அக்னிபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.




வாழ்த்தி பாடியவர்கள்:
 
  திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

பூவுந்நீரும் பலியும் சுமந்து புகலூரையே நாவினாலே நவின்றேத்த லோவார் செவித் துளைகலால் யாவும் கேளார் அவன்பெருமை அல்லால் அடியார்கள்தாம் ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்று உள்ளம் கொள்ளவே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 75வது தலம்.
 

ஸ்தல சிறப்பு :

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு அக்னிபகவானுக்கு 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவம் உண்டு.




ஸ்தலபெருமை:
 
 அப்பர் சுவாமிகள் முக்தி அடைந்த தலம்:
அப்பர் சுவாமிகள் தனது 81 வது வயதில் இத்தலத்தில் உழவார பணி செய்து பெண், பொன், மண்ணாசைகளுக்கு அப்பால் நின்று முக்தி அடைந்த தலம் ஆகும். முக்தி ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.அப்பர் சுவாமிகளுக்கு தனி சந்நிதி. சித்திரை சதயத்திற்கு 10 தினங்களுக்கு முன்பிருந்தே திருநாவுக்கரசர் திருவிழா ஆரம்பமாகி சமண மதத்திலிருந்து சைவ மதமாற்ற, முதல் அரசால் ஆணையிடப்பட்ட ஆக்ஞைகள், உழவாரப் படையின் உயர்வு, அரம்பையர் நடனம், அப்பர் ஐக்கிய காட்சி வரை இன்னும் அப்படியே நடைபெற்று வருகிறது. அருள்மிகு அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக ஆகும்போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும். ஒரே கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு சன்னதிகள் உள்ளது. ஒரு சன்னதியிள் இறைவன் அக்னீஸ்வரர். சுயம்புமூர்த்தி. இவருக்கு சரண்யபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான் என்ற பெயர்களும் உண்டு. இறைவிகருந்தார் குழலி. இவள் சூளிகாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள். மற்றொரு சன்னதியின் இறைவன் வர்த்மானேஸ்வரர். இறைவி மனோன்மணி அம்மை. 63 நாயன்மார்களில் முருக நாயனார் இத்தலத்தில் அவதரித்து வர்த்தமானேஸ்வரருக்கு பூத்தொடுத்து சேவை புரிந்துள்ளார்.



அக்னி பகவானுக்கு சிலை: 
அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாகும். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார். அக்னி பகவானுக்கு உருவம் இத்தலத்தில் உண்டு. 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட. இறைவன் சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த அற்புதம் நிகழ்ந்த தலம். இந்த காரணத்தால் புதிய வீடு கட்டுபவர்கள் செங்கற்களை வைத்து பூஜை செய்து மனை முகூர்த்தம் செய்து வருகின்றனர். வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது.

கருந்தார்குழலி :
இத்தலத்து அம்பாள் மிகவும் விசேசமானவள் . அம்மன் கருந்தார் குழலி பெண் ஒருத்திக்கு தானே பிரசவம் பார்த்து, கூலியாக நிலத்தை பெற்றிருக்கி றாள். எனவே சூலிகாம்பாள் என்ற பெயர் வந்து பின்னர் சூளிகாம்பாள் ஆனாள். சூளிகாம்பாள் என்னும் பெயருடைய இந்த பெருந்தகையாள் தெற்குப் பார்த்த முகமுடையாள். கருந்தாள் என்று எல்லோராலும் கருதப்படுவாள். இப்பகுதியில் பிரசவத்தால் இறப்பே ஏற்படாது என்ற ஐதீகம் உள்ளது.




சனீசுவர பகவான் :
நளச் சக்கரவர்த்திக்கும் சனீஸ்சுவர பகவானுக்கும் ஒரே சன்னதி. நள சக்கரவர்த்தி பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் இதிலிருந்து 7 கல் தொலைவில் உள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி ஏற்பட்டதாகும். இத்தலத்தில் சனீசுவர பகவானுக்கு அனுகிரக சனீசுவர பகவான் என்ற பெயர் உண்டு. பூதேசுவரர், வர்த்தமானேசுவரர், பவிஷ்யேசுவரர் மும்மூர்த்திகளும் முறையே கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் முதலியவைகளை குறிப்பதாகும். இத்தலத்தில் முக்காலங்களும் அடங்கியுள்ளது. அருள்மிகு முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து அருள்மிகு வர்த்தமானேசுவரருக்கு புஷ்பத் தொண்டு புரிந்த இடம். திரிமுகாசூரஜ் மூன்று முகங்களை உடையவர். அதாவது மனித முகம், பட்சி முகம், பன்றி முகம். அசுரர்களுக்கு பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த தலம் ஆதலால் புகழூர் என்று பெயர்.


திருவிழாக்கள் :
 
  வைகாசி மாதம் - வைகாசி பூர்ணிமா - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் திருவிழா - அன்றைய தினம் தல புராணப்படி அருள்மிகு சந்திரசேகரர் அக்னிபகவானுக்கு காட்சி அளித்தல் நிகழும். மாதங்கள் தோறும் முக்கிய திருவிழாக்கள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. சித்திரை மாதம் - சதய நட்சத்திரத்தன்று - 10 நாட்கள் - அப்பர் பக்தோற்சவம் - இதுவும் இத்தலத்தில் நடைபெறும் மிக முக்கிய திருவிழா ஆகும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.


பொது  தகவல்:
 
  சதயம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பர். பால் பாக்கியம் பெற்று செல்வவளத் தோடு வாழ்வர். பொறுமை மிக்க இவர்கள், விசாலமான சிந்தனையுடன் செயல்படுவர். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். தீர்க்கமான யோசனைக்குப் பிறகே செயலில் ஈடுபடுவர். செயல்களில் திறமையும், நல்ல நடத்தையும் கொண்டிருப்பர். பாணாசுரன் வெட்டிய அகழி இப்போதும் கூட காணப்படுகிறது. இத்தல விநாயகர் ஞான விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
 



பிரார்த்தனை
 
  சதயம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். வாஸ்து பூஜை செய்தல் இத்தலத்தின் மிகவும் விசேசமான பிரார்த்தனை ஆகும். புதிய வீடு கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் செங்கல் வைத்து அதற்கு வாஸ்து பூஜை செய்து அர்ச்சனை பண்ணி அந்த செங்கலை எடுத்து செல்கிறார்கள். பெண்களுக்கு பிரசவ காலத்தில் வயிற்றில் வலி ஏற்படாமல் இருக்க இங்கு வழிபடுகிறார்கள்.

இங்கு அம்பாளே ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததாக புராணம் சொல்வதால் இங்கு எண்ணெய் பிரசாதம் தரப்படுகிறது. அது பிரசவ வலியை போக்கி சுகப்பிரசவம் அடையச் செய்வதால் பெண்கள் இங்கு பெருமளவில் வந்து வழிபடுகிறார்கள். இத்தலத்தில் சுயம்புவாய் வீற்றிருக்கும் அக்னீசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
 


நேர்த்திக்கடன்:
 
  திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும்,சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர்,விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.


கோவில் விவரங்கள் :

மூலவர்                                   :          அக்னிபுரீஸ்வரர், சரண்யபுரீஸ்வரர்,
                                                                        பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான்

அம்மன்/தாயார்                   :         கருந்தார் குழலி, சூளிகாம்பாள்

தல விருட்சம்                           :         புன்னை மரம்

தீர்த்தம்                                   :         அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்

பழமை                                           :         1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்                                           :         திருப்புகலூர்

மாவட்டம்                                   :          திருவாரூர்

மாநிலம்                                   :         தமிழ்நாடு




அமைவிடம் :

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் உள்ளது.

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்) திருக்கோயில்--கீழப்பூங்குடி(சிவகங்கை மாவட்டம் )


அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்) திருக்கோயில்--கீழப்பூங்குடி (சிவகங்கை மாவட்டம் )

நட்சத்திர கோவில்கள் :

நட்சத்திரம் : உத்திராடம்


ஸ்தல வரலாறு :

புராணங்கள் சொல்வதன்படி, சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. இதே போல, பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. மேலும், படைக்கும் தொழிலையும் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவர் என கருதினார். இதனால், சிவன் அவரது ஒரு தலையைக் கொய்தார். சிவபாவத்திற்கு ஆளான பிரம்மா, தவறுக்கு மன்னிப்பு கிடைக்க பல தலங்களில் சிவபூஜை செய்தார். அவ்வாறு பூஜித்த தலங்களில் இதுவும் ஒன்று. பிரம்மாவிற்கு அருளியதால் சிவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்ம வித்யாம்பிகை எனப்பட்டாள். பூங்குடியாள் என்றும் பெயருண்டு. இக்கோயில் காலப்போக்கில் அழிந்து விட்டது. அதன்பின் புதிதாக கோயில் எழுப்பப்பட்டது. சிவனுக்கு சுந்தரேஸ்வரர் என்றும், அம்பிகைக்கு மீனாட்சி என்றும் பெயர் சூட்டப்பட்டது.





ஸ்தல சிறப்பு :

தனிச்சன்னதியிலுள்ள நடராஜர், ஆடுவதற்கு தயாரான நிலையில் அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் காட்சி தருவது சிறப்பு.


ஸ்தல பெருமை :

உத்திராடம் நட்சத்திர தலம்:
ஆடம் என்றால் முதலில் தோன்றியது என்று பொருள். 27 நட்சத்திரங்களில் மூத்த நட்சத்திரமாக உத்திராடம் விளங்குகிறது. எனவே தான் முதன் முதலில் தோன்றிய உத்திராட நட்சத்திர தேவியான பூங்குடியாளை 26நட்சத்திர தேவியரும் பாதபூஜை செய்வதாக கூறப் படுகிறது. (உத்திராடம் முதல் நட்சத்திரம் என்பதால் தான், இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக முழுமுதல் கடவுளான விநாயகரை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்) உத்திராடம் நட்சத்திரத்தினருக்கு ஏற்படும் சகலதோஷங்கள் நீங்கவும், வாழ்வில் முன்னேற்றம் பெறவும் அந்த நட்சத்திர நாளில் வந்து வழிபடலாம். அன்று சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு.




விசேஷ சிவத்தலம்:
பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு. சித்திரை பிறப்பன்று காலையில் விசேஷ ஹோமம் நடக்கும். அப்போது, அன்றிரவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாவர். மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடக்கும் நாளில், இங்கும் திருக்கல்யாணம் நடக்கும். மார்கழி திருவாதிரையன்று இரவில் அம்பாள் சன்னதியில் அதிகமான பூக்களை நிரப்பி விசேஷ பூஜை நடக்கும்.





லிங்கோத்பவர் பூஜை:
ஐந்து நிலை கோபுரத்துடன் அமைந்த கோயில் இது. எதிரே தீர்த்தக்குளம் உள்ளது. தனிச்சன்னதியிலுள்ள நடராஜர், ஆடுவதற்கு தயாரான நிலையில் அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ பூஜை உண்டு. சிவன் சன்னதிக்கு பின்புறம் கோஷ்டத்திலுள்ள லிங்கோத்பவருக்கு திருக் கார்த்திகையன்றும், சிவராத்திரி இரவில் மூன்றாம் காலத்திலும் விசேஷ பூஜை நடக்கும்.


பொது தகவல்:
 
 
உத்திராடம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: அழகான தோற்றமும், தேகபல மும் கொண்டவர்கள். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். கலைகளில் ஆர்வம் காட்டுவர். பொறுமையும், இனிமையும் இவர்கள் பேச்சில் கலந்திருக்கும். தான் நினைத்த விஷயத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர்கள்.




பிரார்த்தனை
 
  உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைக்க, குடும்பத்தில் ஒற்றுமை இருக்க அம்பிகையிடம் வேண்டிக்கொள்கின்றனர்.


நேர்த்திக்கடன்:
 
  இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறியோர், சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சந்தனக்காப்பிட்டும் நேர்த்திக்கடன் செலுத்துவதுண்டு.




கோவில் விவரங்கள் :
 
மூலவர்                      :                   பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்)

அம்மன்/தாயார்      :                  பிரம்மவித்யாம்பிகை (மீனாட்சி)

தல விருட்சம்              :                  கடம்ப மரம்

தீர்த்தம்                      :                   பிரம்ம தீர்த்தம்

ஆகமம்/பூஜை              :                  சிவாகமம்

பழமை                              :                 500-1000 வருடங்களுக்கு முன்
 
ஊர்                              :                 கீழப்பூங்குடி

மாவட்டம்                      :                  சிவகங்கை

மாநிலம்                      :                 தமிழ்நாடு




அமைவிடம் :

சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடியை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு. (மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.) மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.


அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்--பசுபதி கோவில் (தஞ்சாவூர் மாவட்டம் )


அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்--பசுபதி கோவில் (தஞ்சாவூர் மாவட்டம் )

நட்சத்திர கோவில்கள் :

நட்சத்திரம் : கேட்டை


ஸ்தல வரலாறு :

ராமானுஜர், அவரது குரு பெரிய நம்பிகள், சீடர் கூரத்தாழ்வார் ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். ராமானுஜர் புகழ் பெறுவதைப் பிடிக்காத சோழ மன்னர் ஒருவர், அவரை சிறைப்பிடித்து வரும்படி படைகளை அனுப்பினார். படையினருக்கு ராமானுஜரை அடையாளம் தெரியாது. எனவே, சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜர் போல வெண்ணிற ஆடை அணிந்து, சோழ படையினரிடம் நானே ராமானுஜர் என்று சொல்லி அவர்களுடன் சென்றார். அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் சென்றனர்.

பெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், தனது மதமே உயர்ந்தது என எழுதித்தரும் படி மன்னன் சொன்னான். அவர்கள் மறுக்கவே, இருவரின் கண்களையும் பறிக்கும் படி கூறினான். கூரத்தாழ்வார், தன் கண்களை தானே குத்தி பார்வை இழந்தார். சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினர். பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்து வந்து, இத்தலத்தில் தங்கினாள். இவ்வேளையில் பெரிய நம்பிகளுக்கு வயது 105. தள்ளாத வயதில் கண்களை இழந்து துன்பப்பட்டார். அப்போது அவருக்கு காட்சி தந்த வரதராஜப்பெருமாள், அவர் தங்கியிருந்த இந்த தலத்திலேயே மோட்சம் கொடுத்தார். இவர் வரதராஜ பெருமாள் எனப்படுகிறார். இவருடன் பெருந்தேவி தாயாரும் அருள் செய்கிறாள்.




ஸ்தல சிறப்பு :

ராமானுஜரின் குரு பெரிய நம்பிகளுக்கு பெருமாள் இத்தலத்தில் காட்சி தந்ததுடன், மோட்சமும் கொடுத்தது சிறப்பாகும்.




ஸ்தல பெருமை :

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ அடிக்கடி சென்று வழிபட வேண்டிய தலம் இது. பெரியநம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார். அன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும்.. மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜை உண்டு. கேட்டை நட்சத்திரத்தினர், தங்களுக்கு ஜாதக தோஷம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்பவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை நைவேத்யம் செய்கின்றனர். மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் என்பது நம்பிக்கை. இந்த எண்ணெய் கோயிலிலேயே கிடைக்கிறது. கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால் பலன் இரட்டிப்பாக இருக்கும் என்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.







 பொது தகவல்:
 
 
இங்கு வரதராஜப்பெருமாளும், தாயார் பெருந்தேவியாரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.

கேட்டை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கல்வியில் தேர்ச்சி பெற்று திகழ்வர். தைரியமும் துணிச்சலும் இயல்பாக இருக்கும். குறும்புத்தனமும், நகைச்சுவையும் கொண்டவர்கள். அழகாகவும், சுருக்கமாவும் பேசுவதில் வல்லவர்கள். முன் நின்று எந்தச் செயலையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் உண்டு. முன்கோபம் இருந்தாலும், யாருக்கும் தீங்கு எண்ண மாட்டார்கள்.


பிரார்த்தனை
 
  கேட்டை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழ்வாரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.





நேர்த்திக்கடன்:
 

  பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இத்தல பெருமாளுக்கு வெண்ணிற வஸ்திரம், மல்லிப்பூ மாலை அணிவித்து, அதிரசம், வடை போன்ற பதார்த்தங்கள் வைத்து, நெய் தீபம் ஏற்றுகின்றனர். மேலும், மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்க்கப்பட்ட எண்ணெயில் தீபமேற்றி வழிபடுவது இன்னும் விசேஷ பலன் தரும்.
 



கோவில் விவரங்கள் :

மூலவர்                      :                        வரதராஜப்பெருமாள்

அம்மன்/தாயார்      :                        பெருந்தேவி

பழமை                              :                        500-1000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்              :                        பசுபதிகோவில்

ஊர்                              :                       பசுபதிகோவில்

மாவட்டம்                      :                       தஞ்சாவூர்

மாநிலம்                      :                       தமிழ்நாடு

அமைவிடம் :

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.


Tuesday, February 18, 2014

அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்-இடையாற்று மங்கலம்(திருச்சி மாவட்டம் )


அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்-இடையாற்று மங்கலம்(திருச்சி மாவட்டம் )


நட்சத்திர கோவில்கள்

நட்சத்திரம் : உத்திரம்


ஸ்தல வரலாறு :

மாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின் திருமணத்தில், மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்தியவர். இவரது தவ வலிமை அனைத்தும் அவரது உள்ளங்கைகளில் அடங்கியிருந்தது. மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கெல்லாம் இவரே குரு(திருமணப்பத்திரிகைளில் மாங்கல்யத்துடன் பறப்பது போன்ற தேவதைகளைஅச்சிடும் வழக்கம் இப்போதும் உள்ளது) திருமணத்திற்கான சுப முகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பர். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல் சூட்சும வடிவில் இத்தலத்து, மாங்கல்யேஸ்வரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதாக ஐதீகம். உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன.




ஸ்தல சிறப்பு :

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்.


ஸ்தல பெருமை :

 
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திரத்தன்றோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய உத்தமத்தலம் இது. தங்களது கணவன்மார்கள் நீண்ட ஆயுளடன் சிறப்பாக வாழவும், பாதங்களில் புரை நோய் உள்ளவர்களும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் பிள்ளைகளுடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்து பலனடைகிறார்கள்



பொது தகவல்:
   
  உத்திரம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: உறவினர்களிடமும், நண்பர்களிடமும் இனிமையாகப் பழகுவர். பிறர் செய்த உதவிகளை நன்றியோடு எண்ணும் பண்பு கொண்டவர்கள். சுகபோகங்களை அனுபவிப்பதில் விருப்பம் இருக்கும். வாக்கு நாணயம் தவறாத குணம் கொண்ட இவர்கள், தெய்வ வழிபாட்டில் பக்தியோடு ஈடுபடுவர். மாங்கல்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், மாங்கல்ய மகரிஷி, தட்சிணாமூர்த்தி,பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நந்தி, நவக்கிரகங்கள் உள்ளனர்.  
   
 


பிரார்த்தனை
   
  உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்திற்குரிய முக்கிய பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. குடும்ப ஒற்றுமைக்காகவும், உடலில் கால்வலி குணமாகவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. உத்திரத்தில் பிறந்த பெண்கள், தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ இவரை வணங்கி வரலாம். தீராத கால்வலி உள்ளவர்கள் குணமடையவும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் குடும்பத்துடன் சேரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.  
   



நேர்த்திக்கடன்:
   
  திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தவுடன் விரைவில் திருமணம் கூடுகிறது. திருமணம் நிச்சயம் ஆனவுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று, பின் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷியிடம் பத்திரிக்கை வைத்து எங்களது கல்யாணத்தையும் சிறப்பாக நடத்தி கொடுங்கள் என வேண்டுகின்றனர். கல்யாணம் நடந்தவுடன் தம்பதி சமேதராக வந்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.  
   

கோவில் விவரங்கள் :

மூலவர்                     :                        மாங்கல்யேஸ்வரர்

உற்சவர்                     :                       சோமாஸ்கந்தர்

அம்மன்/தாயார்     :                        மங்களாம்பிகை

தல விருட்சம்             :                        பவளமல்லி

தீர்த்தம்                     :                       கிணறு
 
பழமை                             :                      500-1000 வருடங்களுக்கு முன்
 
ஊர்                             :                     இடையாற்று மங்கலம்

மாவட்டம்                     :                     திருச்சி

மாநிலம்                     :                     தமிழ்நாடு





அமைவிடம் :

திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்றுமங்கலத்திற்கு ஆட்டோவில் வரலாம். குறிப்பிட்ட நேரங்களில் நேரடி பஸ்சும் உள்ளது. 

அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்-- அதிராம்பட்டினம்(தஞ்சாவூர் )


அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்-- அதிராம்பட்டினம்(தஞ்சாவூர்  )


நட்சத்திர கோவில்கள்


நட்சத்திரம் : திருவாதிரை


ஸ்தல வரலாறு :

முன்னொரு காலத்தில், அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அவர் அபயம் தந்து காப்பாற்றுவார்.

இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ரைவதம் என்பது சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா! என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.




ஸ்தல பெருமை :

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய சிறந்த தலம் இது. திரிநேத்ர சக்தி கொண்ட தலம். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபய வரதீஸ்வரராக இத்தல இறைவன் விளங்குகிறார். இத்தல அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. திருக்கடையூருக்கு அடுத்தபடியாக எமபயம் போக்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது. சமயக்குரவர் மூவரில் சுந்தரரும், சம்பந்தரும் இத்தலத்தை தங்களது தேவார வைப்புத்தலமாக பாடியுள்ளனர்.




எம பயம் போக்கும் தலம்:
தீராத நோயால் அவதிப் படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த நட்சத்திர பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள் செய்துள்ளார். ஆரம்ப காலத்தில் இத்தலம் திருஆதிரைப்பட்டினமாக இருந்து,அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது அதிராம்பட்டினமாக மாறிவிட்டது.


ஸ்தல சிறப்பு :

இத்தல அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.





பொது தகவல்:
 
 
திருவாதிரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: மற்றவர்களிடம் எளிதில் பழகி தங்களின் நண்பராக்கும் திறமை உடையவர்கள். சாமர்த்தியமாக சம்பாதிக்கும் குணம் கொண்ட இவர்கள், அதை திட்டமிட்டு முறையாகச் செலவழிக்கவும் செய்வர். வாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பர். கலைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டுவர். சுபவிஷயங்களை முன்னின்று நடத்துவர்.


 பிரார்த்தனை
 
 
திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்தஞ்சய ஹோமமும் இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. எந்த தோஷத்தினாலும் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.





நேர்த்திக்கடன்:
 
  சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
 

கோவில் விவரங்கள் :

மூலவர்                 :                       அபய வரதீஸ்வரர்

அம்மன்/தாயார் :                        சுந்தர நாயகி

தல விருட்சம்         :                        வில்வம்,வன்னி
 
பழமை                         :                        1000-2000 வருடங்களுக்கு முன்
 
ஊர்                         :                       அதிராம்பட்டினம்

மாவட்டம்                 :                        தஞ்சாவூர்

மாநிலம்                :                               தமிழ்நாடு






அமைவிடம் :


தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தை அடையலாம். 

Monday, February 17, 2014

அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்-- கஞ்சாநகரம்(காஞ்சன நகரம் ) நாகப்பட்டினம்


அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்-- கஞ்சாநகரம்(காஞ்சன நகரம் ) நாகப்பட்டினம் 


நட்சத்திர கோவில்கள் :


நட்சத்திரம் : கார்த்திகை


ஸ்தல வரலாறு :

பத்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இவர்களது குறைபோக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ரஜோதி (நெருப்பு வடிவம்) யோகம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த காலம் அது. அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன், காத்ர சுந்தரேஸ்வரர் (கார்த்திகா சுந்தரேஸ்வரர்) என்னும் பெயர் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன. அந்தப் பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின. முருகன் பிறக்க காரணமான, இத்தல இறைவனிடமிருந்து ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால் இவ்வூர் காஞ்சன நகரம் என்று பெயர் பெற்றிருந்தது. காலப் போக்கில் கஞ்சாநகரம் (பொன் நகரம்) ஆனது. தான் தோன்ற காரணமாக இருந்த இத்தல இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது. கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவிதஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்று பொருள்.






ஸ்தல சிறப்பு :

சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். 63 நாயன்மார்களில் மானக்ஞ்சார நாயனார் இத்தலத்தில் தான் அவதாரம் செய்து முக்தி அடைந்துள்ளார். கார்த்திகைப்பெண்கள் அறுவரும் இங்கு அவதாரம் செய்ததாக கூறப்படுகிறது.


ஸ்தல பெருமை :

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் புண்ணிய நதிகளின் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.




வேதம் ஓதும் கிளி:
மதுரை மீனாட்சியைப் போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ் தானம்பிகையின் கையில் கிளி இருக்கிறது. இதற்கு வேதாமிர்த் கீரம் என்று பெயர். மற்ற கரங்களில் நீலோத்பவ மலர், சங்கு, சக்கரம் வைத்திருக்கிறாள். சிவனே வேத சக்தியாக கிளி வடிவில் அம்மனின் இடதுதோளில் அமர்ந்திருப்பது சிறப்பு. இது வேதமோதும் கிளியாகும். இத்தல அம்மனை வியாசரும், சுகப்பிரம்ம மகரிஷியும் வழிபாடு செய்துள்ளனர். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கார்த்திகை நட்சத்திர நாட்களில் இந்தக் கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் இரவு சட்டநாதருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.




பொது தகவல்:
 
  கார்த்திகை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வந்தராகவும், திறமை மிக்கவராகவும் இருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் பிடிப்புடன் திகழ்வர். கலைகளை ஆர்வமுடன் கற்கும் சுபாவமிருக்கும். மனதில் மென்மை குடி கொண்டிருக்கும். பெண்களிடம் நட்புடன் பழகும் இயல்பைப் பெற்றிருப்பர். கல்வியில் ஆர்வம் இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்குத் தேவையான தகுதிகள் யாவும் இவர்களிடம் இருக்கும். கோயில் பிரகாரத்தில் செல்வ விநாயகர், நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், மேதா தட்சிணாமூர்த்தி, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது. மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், வள்ளலார் கோயில், திருஇந்தளூர், பல்லவனீஸ்வரர் ஆகிய கோயில்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.
 






பிரார்த்தனை:
 
 
கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தில் தடை உள்ள பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வழிபாடு செய்கிறார்கள். சொத்து தகராறு, பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர இங்கு வழிபாடு செய்கிறார்கள்.




நேர்த்திக்கடன்:
 
  தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க பெண்கள் இத்தலத்தில் சுமங்கலி பூஜை செய்கின்றனர்.
 

கோவில் விவரங்கள் :

மூலவர்                               :                       காத்ர சுந்தரேஸ்வரர்

அம்மன்/தாயார்               :                      துங்கபாலஸ்தானம்பிகை

 பழமை                              :                     2000-3000 வருடங்களுக்கு முன்
 
 ஊர்                                     :                      கஞ்சாநகரம்

மாவட்டம்                             :                     நாகப்பட்டினம்

மாநிலம்                             :                     தமிழ்நாடு


அமைவிடம் :

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்-தீயத்தூர்(புதுகோட்டை மாவட்டம்)


அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்-தீயத்தூர்(புதுகோட்டை மாவட்டம்)


நட்சத்திர கோவில்கள் :

நட்சத்திரம் : உத்திரட்டாதி 


ஸ்தல வரலாறு :

திருமால் தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு லிங்க பூஜை செய்து வந்தார். ஒருமுறை ஒரு பூ குறைந்தது. எனவே, தன் கண்ணையே ஒரு மலராக்க நினைத்து, அதை எடுக்க முயன்றபோது, சிவன் அவர் முன் தோன்றி தடுத்தார். இதையறிந்த லட்சுமிக்கும், சிவதரிசனம் பெறும் எண்ணம் ஏற்பட்டது. அகத்தியரின் ஆலோசனையின் படி, பூலோகம் வந்து, ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை பூஜை செய்தாள். இவளது பூஜையில் மகிழ்ந்த சிவன் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்தார். இதனால் இத்தல இறைவன், சகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆனார். சகஸ்ரம் என்றால் ஆயிரம். 





ஸ்தல சிறப்பு :

இக்கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியது ... இக்கோவிலின் வினைப்படி சில ஆண்டுகளில் இக்கோவில் பொலிவிழக்கும் மறுபடியும் உருவாக்கப்படும் ,,
மறுபடியும் பொலிவிழக்கும் என்பது விதி இதற்கு காரணம் சொல்லப்பட வில்லை 


ஸ்தலபெருமை:
   
 உத்திரட்டாதி நட்சத்திர தலம்:
அகிர்புதன் மகரிஷி, தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸ மகரிஷி, அக்னி புராந்தக மகரிஷி, ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க மாதம் தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து சிவனை ஹோம பூஜை செய்து வழிபட வருவதாக ஐதீகம். எனவே உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, உத்திரட்டாதி நட்சத்திரத்திலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம் இது.





இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , தங்களது நட்சத்திர நாளில் இத்தலத்தில் ஹோமங்கள் செய்து, நெய், முழு முந்திரி, திராட்சை, தேன், பாதாம்பருப்பு, ஆகியவை கலந்த சர்க்கரைப்பொங்கலை சிவனுக்கு நைவேத்தியம் செய்து ஏழை மக்களுக்கு அளிப்பது சிறப்பு. இதனால் பணக்கஷ்டம் நீங்கும், தடைபட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பம்சம்:
தேவசிற்பி விஸ்வகர்மா, அகிர்புதன், ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷிகள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க, உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து சிவனை ஹோம பூஜை செய்வதாக ஐதீகம். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில், இங்கு வந்து ஹோமம் செய்து சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் செய்கிறார்கள். இதனால் பணக்கஷ்டம் நீங்கும், தடைபட்ட செயல்பாடுகள் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை.





பெயர்க்காரணம்:
தீயாகிய அக்னிபகவானும், அயனாகிய சூரிய பகவானும் இங்கு ஹோமம் செய்து சிவனை வழிபட்டதலமாதலால், இவ்வூர் தீயத்தூர் ஆனது. அக்னி வழிபட்ட தலமாதலால், உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தீர சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்கள். கடன் பிரச்னை தீரவும், செல்வம் செழிக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இத்தலத்து பிரகன்நாயகி அம்பாளை வழிபடுகின்றனர். சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது.





பொது தகவல்:
   
  உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: வாக்குவன்மை கொண்ட இவர்கள், கல்வியில் சிறந்து விளங்குவர். ஆடை ஆபரணங்களை அணிவதில் ஆர்வம் இருக்கும். முன்கோபம் இவர்களின் இயல்பாக இருக்கும். தெய்வீக விஷயங்களில் நாட்டம் கொண்டிருப்பர். பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும் இவர்கள், தனது கடமைகளில் திறமையோடு ஈடுபடுவர். அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். பிரகாரத்தில் விநாயகர், நந்தி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, நாகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், நவக்கிரகம், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. வாஞ்சா கணபதி தனி சன்னதியில் உள்ளார்.லட்சுமி பூஜை செய்த சிவன் என்பதால், இத்தலத்தை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்.  
   

பிரார்த்தனை:
   
 
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கடன் பிரச்னை தீர, செல்வம் செழிக்க, புத்திர பாக்கியம் கிடைக்க வழிபாடு செய்யப்படுகிறது.





நேர்த்திக்கடன்:
   
  சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. இத்தலத்தில் ஹோமங்கள் செய்து, நெய், முழு முந்திரி, திராட்சை, தேன், பாதாம்பருப்பு, ஆகியவை கலந்த சர்க்கரைப்பொங்கலை சிவனுக்கு நைவேத்தியம் செய்து ஏழை மக்களுக்கு அளிப்பது சிறப்பு.







கோவில் விவரங்கள் :

மூலவர்                           :                    சகஸ்ரலட்சுமீஸ்வரர்

அம்மன்/தாயார்      :                பிரகன்நாயகி, பெரியநாயகி

தல விருட்சம்              :                வேம்பு

தீர்த்தம்                      :               தாமரைக்குளம்

ஆகமம்/பூஜை      :               காமிகம்

பழமை                      :               1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்              :               தீ அயனூர்

ஊர்                              :               தீயத்தூர்

மாவட்டம்              :               புதுக்கோட்டை

மாநிலம்                      :               தமிழ்நாடு



அமைவிடம் :


புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூரை அடையலாம். தூரம் 120 கி.மீ.