அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்--காருகுடி (திருச்சி மாவட்டம் )
நட்சத்திர கோவில்கள்
நட்சத்திரம் : ரேவதி
ஸ்தல வரலாறு :
சந்திர பகவான், கடைசி நட்சத்திர தேவியான ரேவதியை மணந்தார். அவர்கள், சிவனையும், பார்வதியையும் தரிசிக்க விரும்பினர். இதையறிந்த அம்பிகை கருணை கொண்டு, இத்தலத்தில் சிவனுடன் காட்சி கொடுத்தாள். சிவனுக்கு கைலாசநாதர் என்றும், அம்பாளுக்கு கருணாகரவல்லி என்றும் பெயர் ஏற்பட்டது. கார் எனப்படும் ஏழுவகை மேகங்களும் ரேவதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்கின்றன. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் திருவாதிரையன்றும், ரேவதிநட்சத்திரத் தன்றும் இங்கு வருண பகவானுக்கு ஹோமம் செய்தால், மழை பெய்யும். தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் கிடைக்கு மென நம்புகிறார்கள். விவசாயிகளுக்குரிய கோயிலாக இது விளங்குகிறது.
ஸ்தல பெருமை :
சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி என்ற மன்னன் இக்கோயிலை புதிப்பித்து கட்டியுள்ளான். 1266ம் ஆண்டுகளில் கர்நாடக மன்னன்போசல வீரராமநாதன் என்பவன் இக்கோயில் பூஜைகள் தடையின்றி நடக்க நிறைய நிலங்களை தானம் செய்துள்ளான்.1541,1619 ம் ஆண்டுகளில் இக்கோயிலுக்காக ராமசக்கவர்த்தி எனும் மன்னன் நில தானம் செய்துள்ளான். இத்தலத்தின் அருகில் தொட்டியம், குணசீலம், திருஈங்கோய்மலை, உத்தமர் கோவில், திருநாராயணபுரம் ஆகிய திருத்தலங்கள் உள்ளது.
காசிக்கு அடுத்த காருகுடி என்பார்கள். இத்தலத்தின் கீழ் அசோக நட்சத்திரம் சுற்றுகிறது. ஊரிலிருந்து தள்ளி கோயில் அமைந்துள்ளதால், கோயிலுக்கு வருபவர்கள் குருக்களுக்கு போன் செய்து விட்டு வருவது சிறப்பு.
ரேவதி நட்சத்திர பலன்:
சந்திரனுக்கும் 27 நட்சத்திர தேவியருக்கும் சிவனும் , பார்வதியும் இத்தலத்தில் காட்சி கொடுத்தனர். இறைவனின் கருணையை எண்ணி ரேவதி மட்டும் தினமும் இங்கு வந்து பூஜை செய்வதாக கூறப்படுகிறது. எனவே ரேவதி என்ற பெயருடையவர்கள், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ இங்கு வந்து 27 என்ற எண்ணிக்கை வரும்படியான பொருட்களை ( 27 திருமாங்கல்ய சரடு, 27 ரவிக்கை துணிகள், 27 உணவுப்பொட்டலங்கள்) சிவனிடமும் அம்மனிடமும் சமர்ப்பித்து, கோயிலுக்கு வருபவர்களுக்கு கொடுத்தால் தடை பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். ரேவதி நட்சத்திரம் முடிந்து, அஸ்வினி நட்சத்திரம் தொடங்கும் முன்பாக உள்ள 12 நிமிடங்களின் போது சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
பொது தகவல்:
ரேவதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: மனைவியின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பர். எல்லோரிடமும் இணக்கமாக நட்பு கொள்வர். தைரியமும், நேர்மையும் இவர்களின் சுபாவமாக இருக்கும். தன்னைப்பற்றி உயர்வாக நினைப்பர். சுக போகங்களில் நாட்டம் கொள்வர். எதிரிகளை வெல்லும் ஆற்றலைப் பெற்றிருப்பர். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காசி விசாலாட்சி, குங்குமவல்லி, அகோரவீரபத்திரர், கால பைரவர், கபால பைரவர், சூரியன், சந்திரன், நவகிரகம், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, கோமு துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
ரேவதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். நீர் சம்பந்தமான நோய்கள், கண்சம்பந்தப்பட்ட நோய்கள், நாள்பட்ட நோய்கள் குணமாக இங்கு சிறப்பு அர்சசனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
எந்த நட்சத்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இத்தல இறைவனை வணங்கி கோயிலை பிரதட்சணம் செய்தால் பாவங்கள் விலகும் என்பதும், சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கோவில் விவரங்கள் :
மூலவர் : கைலாசநாதர்
அம்மன்/தாயார் : கருணாகர வல்லி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : காருகுடி
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
அமைவிடம் :
திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடிக்கு செல்ல வேண்டும் ....
அருமையான தொகுப்பு சகோ, நன்றி.
ReplyDelete