Friday, January 31, 2014

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்- பண்பொழி (திருநெல்வேலி )



அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்- பண்பொழி (திருநெல்வேலி )


நட்சத்திர கோவில்கள் :

நட்சத்திரம் : விசாகம்

ஸ்தல வரலாறு :

ஒரு காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும், என்றார்.

அதன்படியே அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன் பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார். பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பினர்.இக்கோயிலிலுக்கு ஏற 623 படிகள் உள்ளன. அவை அனைத்தும், ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் உறையும் தேவபடிக்கட்டுக்கள். எனவே இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் நமது சந்ததி தழைக்கும் என்பது ஐதீகம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன. சிவகாமி பரதேசி என்ற அம்மையார் இங்கு மண்டபம் எழுப்ப கற்களை கீழிருந்தே வாழைமட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி அதை மலையில் இழுத்துக் கொண்டே சென்று சேர்த்தார் என்பது சிறப்பம்சம்.





ஸ்தல சிறப்பு: 

பந்தளமன்னர் எழுப்பிய கோயில் இது.இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை உள்ளிட்டவை உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.


தலபெருமை:
   
 
இக்கோயில் திருப்பணிக்காலத்தில் கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டன. கனத்த பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறு மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டன. சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டு. தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும். அப்போது, இப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது முருகா எனக்கூறிக்கொண்டு தன் தலையை கொடுத்து தடுத்து நிறுத்துவாராம். மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும் வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம். இப்படி அற்புத சாதனையை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார். மேலும், வாழைமட்டைகளில் செங்கல் ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்தும் சென்று திருப்பணிக்கு உதவியுள்ளார். இவருக்கு இக்கோயிலில் சிலை இருக்கிறது.

மூக்கன்:   
இக்கோயிலின் அர்ச்சகர் பூவன்பட்டர், கோட்டைத்திரடு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தை அகழ்ந்த போது, முருகன் சிலையில் மூக்கில் கடப்பாரை பட்டு சிறு துளி உடைந்து விட்டது. அந்த உடைசல் கூட பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கிராமப்புறத்து மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக மூக்கன் என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்கள். நெல்லை மாவட்ட கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் சூட்டப்படும். இது திருமலை முருகனின் பெயர் தான். மேலும், குழந்தை பிறந்து தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஆண் குழந்தைகளும் பதினைந்து வயது வரை கூட மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் காண முடியும். இரண்டு குழந்தைகள் தவறி, மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு இந்தச் சடங்கை செய்வது மரபாக உள்ளது.




பந்தளமன்னர் எழுப்பிய கோயில்:  
பந்தளமன்னர் எழுப்பிய கோயில் எது என யாரைக் கேட்டாலும், இது தெரியாதா! சபரிமலை ஐயப்பன் கோயில், என்பார்கள். பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பியுள்ளனர். இக்கோயில் உருவாக காரணமாக இருந்த பூவன் பட்டரின் வேண்டுகோளின்படி பந்தளமன்னர் இக்கோயிலை எழுப்பியுள்ளார். இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை உள்ளிட்டவை உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாழை மட்டையில் கல் ஏற்றி இழுத்தவர்:    
பண்பொழி அருகிலுள்ள அச்சன்புதூரில் சிவகாமி அம்மையார் வசித்து வந்தார். இவரது கணவர் கங்கைமுத்து தேவர். இவர்களுக்கு குழந்தை இல்லை. திருமலை முருகனை வணங்கி, குழந்தை வரம் கோரினார். கோயிலில் கல் மண்டபம் ஒன்றை அமைக்கவும் அவர் முடிவெடுத் தார். இதற்கான கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் ஏற்றி, மேலே இழுத்துச் செல்வார். அப்படிப்பட்ட வைராக்கியமான பக்தி அவருடையது. இவ்வளவு சேவை செய்தும் அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லை. தான் கட்டிய கல்மண்டபத்தில் வந்து தங்கிய வரதர் மஸ்தான் என்ற மகானிடம் தன் குறையைத் தெரிவித்தார். அந்த மகான் அவரிடம், இந்த திருமலை முருகனையே உன் குழந்தையாக ஏற்றுக்கொள், என்றதும், அவருக்கே தன் சொத்துக்களை எழுதி வைத்தார். மேலும், புளியரை என்ற கிராமத்தில் முருகனுக்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை அனுபவித்து வந்த சிலர் மீது, திருவனந்தபுரம் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி அவற்றை மீட்டு தன் பிள்ளையான முருகனுக்கே சேர்த்தார். இந்த கல்வெட்டின் நகல்படிவம் இப்போதும் உள்ளது. இந்த அம்மையார் முருகனுக்கே தொண்டு செய்து துறவு பூண்டதால் சிவகாமி பரதேசி அம்மையார் என்று அழைக்கப்பட்டார்.

மலைப்பாதை:    
திருமலை 500 அடி உயரமுடையது. 544 படிகள் ஏறி கோயிலை அடைய வேண்டும். இதை திரிகூடமலை என்றும் சொல்வர். இரண்டு மலைகள் இந்த மலையினைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. மலைப்பாதையின் துவக்கத்தில் வல்லபை விநாயகர் சன்னதி உள்ளது. இவரை வணங்கி, அடிவாரத்திலுள்ள பாதமண்டபத்தைத் தரிசித்து படியேற வேண்டும். இரண்டு பாதங்கள் இந்த சன்னதியில் உள்ளன. பாதையின் நடுவில் நடுவட்ட விநாயகர் சன்னதி உள்ளது. பின்னர் இடும்பன் சன்னதியை வணங்க வேண்டும்.





அஷ்டபத்ம குளம்: 
மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்டபத்ம குளம் என்று அழைத்தனர். இந்தக் குளத்திற்கு தற்போது பூஞ்சுனை என பெயரிட்டுள்ளனர். இங்கு இலக்கியங்களில் நாம் படித்த குவளை என்னும் மலர் இதில் பூத்தது. தினமும் ஒரு மலர் தான் இந்தக் குளத்தில் பூத்ததாம். அதை கரையில் இருந்த சப்த கன்னிமார் எழுவரும் முருகனை பூஜித்தனர். சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், இது முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது சிறப்பு. உமையவளின் ஏழு சக்திகளே சப்தகன்னியர் ஆவர்.





விசாக நட்சத்திர கோயில்:     
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியாவிட்டாலும் இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது நிஜம். வி என்றால் மேலான என்றும், சாகம் என்றால் ஜோதி என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

மலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார்: 
மலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் 16 கல் படிகள் உள்ளன. இவரை சோடச விநாயகர் என்பர். 16படிகள் ஏறி தரிசிப்பதால், இவரை வணங்குவோருக்கு பதினாறு செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.






அன்னதானம்: 
ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் மாதாந்திர முழுக்காப்பு அடியார்கள் சபை சார்பில் இங்கு அன்னதானம் காலை 6மணி முதல் இரவு வரை தொடர்ந்து வழங்கப்படுகிறது.


பொது தகவல்:
   
 
விசாகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: வியாபாரத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவர். நடக்காததையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் பெற்றவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் இருக்கும். தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து கொள்ளும் இவர்கள், திறமைசாலிகளாகவும் இருப்பர். தானதர்மம் செய்வதில் அக்கறை காட்டுவர். இங்குள்ளமூலவருக்கு மூக்கன் என்று ஒரு பெயர் உண்டு. மலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் உள்ளன. மலைமீது திருமலைக்காளி அருள்பாலிக்கிறாள். விநாயகர் சன்னதிக்கு 16 படிக்கட்டுகள் உள்ளன. 16 செல்வங்களும் 16 படிக்கட்டுக்களாக இருப்பதாக கூறுகிறார்கள்.




பிரார்த்தனை
   
 விசாகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். வேண்டியதையெல்லாம் கொடுக்கும் அருள்கடவுளாக உள்ளார்.


கோவில் விவரங்கள் :


மூலவர்                                   :               முத்துக்குமாரசுவாமி
                                                                                                                 
 தீர்த்தம்                                   :               பூஞ்சுனை
 
பழமை                                           :              500-1000 வருடங்களுக்கு முன்
 
ஊர்                                            :              பண்பொழி

மாவட்டம்                                     :             திருநெல்வேலி

 மாநிலம்                                    :              தமிழ்நாடு

அமைவிடம் :

மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். 
திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை பக்கமே அங்கிருந்து செல்லலாம் ...

Thursday, January 30, 2014

அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில்-கோமல் (நாகப்பட்டினம் )



அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில்-கோமல் (நாகப்பட்டினம் )


நட்சத்திர கோவில்கள் :

நட்சத்திரம் : அஸ்தம்


ஸ்தல வரலாறு :

சிவபெருமான் இந்த உலகத்தை எப்படி இயக்குகிறார் என்பதை அறிய பார்வதிதேவி விரும்பினாள். இதுபற்றி அவரிடமே கேட்டாள். அப்போது, சிவன் ஒரு திருவிளையாடல் செய்தார். பார்வதி தன்னை மறந்து விளையாட்டாக தனது கண்களை பொத்தும்படி செய்தார். அந்த நொடியில் உலக இயக்கம் நின்று போனது. இதைக்கண்டு அதிர்ந்து போன பார்வதி, தன்னால் நிகழ்ந்த இந்த தவறுக்கு சிவனிடம் மன்னிப்பு கோரினாள். அதற்கு சிவன், உன் கரத்தினால் என் கண்ணைப் பொத்தி இந்த பிரபஞ்சத்தை இருளாக்கினாய்.இப்போது என் கரத்தில் இருந்து தோன்றும் ஹஸ்தாவர்ண ஜோதியில் நான் மறையப்போகிறேன். நீ பசுவாக மாறி இந்த ஜோதி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து என்னை வந்து சேர்வாய்,என கூறி மறைந்தார். சிவனைக்காணாத பார்வதி, அவரது ஆணைப் படி பசு உருவம் கொண்டு, தன் சகோதரரான திருமாலுடன், சிவஜோதியைத் தேடி பூமியெங்கும் வலம் வந்தாள். பார்வதி மீது கிருபை கொண்டார் சிவன். ஒரு அஸ்த நட்சத்திர நாளில், ஹஸ்தாவர்ண ஜோதி தோன்றியது. இதை கோமளீய ஜோதி என்றும் சொல்வர். பார்வதி மனம் மகிழ்ந்து அந்த ஜோதியுடன் ஐக்கியமானாள். பார்வதிக்கு கிருபை செய்த, இந்த சம்பவத்தின் அடிப்படையில் கோமலில் ஒரு கோயில் எழுப்பப்பட்டது. கிருபை செய்த சிவனுக்கு, கிருபா கூபாரேச்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பாளுக்கு அன்னபூரணி என பெயர்.




ஸ்தல சிறப்பு :

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


ஸ்தல பெருமை :

அஸ்தம் நட்சத்திர தலம்:
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது அஸ்தம் நட்சத்திர நாளிலோ இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. கிருபா கூபாரேச்வரர் எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர். சித்தர் களும், முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை கைகூப்பி வணங்கிய நிலையில் வலம் வருவதாக ஐதீகம். அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொழுக்கட்டை, வடை, லட்டு நைவேத்யம் செய்து, கிருபா கூபாரேச்வரரையும், அன்னபூரணியையும் அஸ்த நட்சத்திர நாளில் கரங்கள் கூப்பியபடி வலம் வந்தால் இறைவனின் பரிபூரண அருளைப்பெறலாம். கலங்கிய மனமுள்ளவர்களும், நல்வாழ்க்கை அமைய ஏங்குபவர்களும் திங்கள், புதன் கிழமைகளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.





பொது தகவல்:
   
 
அஸ்தம் நட்சத்திரக்காரர்களின் பொதுகுணம்: ஆடை, ஆபரணங்களில் பிரியம் கொண்டவர்கள். கல்வியில் ஆர்வம் காட்டுவர். நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ரசிகத்தன்மை இருக்கும். வாயடித்தனமாகவும், விகடமாகவும் பேசும் இயல்பு கொண்டவர்கள். யாரிடமும் தானாக வலியச் சென்று பழகும் இவர்கள், தாயாரின் மீது அலாதி அன்பு கொண்டிருப்பர். பார்வதி பசுவாக மாறி இங்கு வழிபாடு செய்ததால் இத்தலம் கோபுரி என்றும் கோமல் என்றும் வழங்கப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் விநாயகர், முருகன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர்.





பிரார்த்தனை
   
 
அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அதிக அளவில் பிரார்த்தனை செய்கிறார்கள்.





   
நேர்த்திக்கடன்:
   

  பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற பசு, கன்றுடன் இக்கோயிலை வலம்வந்து வணங்குகிறார்கள்.







கோவில் விவரங்கள் :

மூலவர்                            :          கிருபாகூபாரேச்வரர்
 
அம்மன்/தாயார்               :          அன்னபூரணி

தல விருட்சம்                    :         வில்வம்


ஆகமம்/பூஜை               :           காரண ஆகமம்

 பழமை                            :         1000-2000 வருடங்களுக்கு முன்

 புராண பெயர்                    :         கோபுரி

 ஊர்                                    :         கோமல்

மாவட்டம்                    :         நாகப்பட்டினம்


மாநிலம்                            :         தமிழ்நாடு



அமைவிடம் :

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் உள்ளது

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்- விராலிப்பட்டி, தவசி மேடை (திண்டுக்கல் மாவட்டம் )



அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்- விராலிப்பட்டி, தவசி மேடை (திண்டுக்கல் மாவட்டம் )

நட்சத்திர கோவில்கள்:

நட்சத்திரம் : மகம் 


ஸ்தல வரலாறு :

சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். தனக்கு உதவியஆஞ்சநேயரை கவுரவிக்கும் விதமாக, தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி கூறினார். (இந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது) இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர், இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. மதுரை மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர்.

சிறப்பம்சம்: பரத்வாஜர் இந்தக்கோயிலுக்கு வந்து, ஒரு தவமேடை அமைத்தார். அதில் அமர்ந்து யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம் தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த பீடங்களின் வடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பல ரிஷிகளும், மகான்களும் அரூப வடிவில் கலந்து கொள்வதாக ஐதீகம். மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது பழமொழி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரதாவாஜரை குருவாகக் கொண்டு மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை.






ஸ்தல சிறப்பு:
   

  சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. மகம் நட்சத்திரத்திற்குரிய சிறப்பான ஆலயம் இது. மக நட்சத்திரம் தவிர மற்ற 26 நட்சத்திரக்காரர்களும் வணங்கி வழிபட்டு சகல சவுபாக்கியங்களையும் பெறக்கூடிய சிறப்பு பெற்றது. பொதுவாக, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால், இங்கு ஒரே சன்னதிக்குள் மாணிக்கவள்ளி, மரகதவள்ளி என்ற இரண்டு அம்பிகைகள் இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிவலிங்கம் வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பரத்வாஜ மகரிஷியால் பூஜிக்கப்பட்டது. பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் வழிபட வேண்டிய தலம் இது. அகத்தியர் முதல் பல ஆயிரம் சித்தர்கள், மகரிஷிகள், மற்றும் முனிவர்களும் தவமியற்றி வழிபட்ட லிங்கம். ராமர் தன் பரிவாரங்களுடன் பரத்வாஜ மகரிஷியை தரிசித்து விருந்துண்ட தலம். இங்குள்ள பைரவர் ஈசனுக்கு நேர் எதிரே ஆதிபைரவராக அருள்பாலிக்கும் சிறப்புப் பெற்ற ஒரே ஸ்தலம்.






தலபெருமை:
   
  மகம் நட்சத்திர கோயில்: பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

இரண்டு அம்பிகையர்: 

அளவில் சிறிய இக்கோயிலில், மகாலிங்கேஸ்வரர் 
கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு வலது பக்கத்தில் உள்ள சன்னதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி என்ற இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரையில் அருளும் மீனாட்சியம்மனின் பெயரால் இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய இந்த சன்னதிக்குள், அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர். சன்னதிக்குள் எட்டிப்பார்த்துதான் இவர்களைத் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியைக் காண்பது அரிது. இச்சா சக்தி, கிரியா சக்தியாக அருள்பாலிக்கும் இந்த அம்பிகையரை வழிபட்டால், ஞான சக்தியான இறைவனை எளிதாக அடையலாம் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு அமைத்துள்ளனர். பரத்வாஜர் ஒரு தவமேடையில், யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் எப்போதும் யோகிகளும், தபஸ்விகளும் சிவனை அரூபமாக பூஜை செய்து வருகின்றனர். பெண்களால் இவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் தான், அம்மன் வெளியே தெரியாமல் சுவரை ஒட்டி அருள்பாலிப்பதாக தல வரலாறு கூறுகிறது.


ஆதி பைரவர்:
சிவாலயங்களில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் காட்சி தரும் பைரவர், இங்கு சிவனுக்கு எதிரில் காட்சியளிக்கிறார். இங்கு அருளும் மகாலிங்கேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இவரது உக்ரம் பக்தர்களைத் தாக்காமல் இருக்க எதிரில் பைரவரை பிரதிஷ்டை செய்துள்ளனர். இவரை ஆதி பைரவர் என்கின்றனர். பைரவருக்குப் பின்புறம் தலைக்கு மேலே சிறிய துளை ஒன்றுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த துளை வழியாக, சிவனை தரிசித்து விட்டு, பின்பு பைரவரை வணங்கி, அதன்பின்பு கோயிலுக்குள் செல்கிறார்கள். சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு.





 பொது தகவல்:
   
  மகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர். பெரும்பாலும் தலைமைப்பதவியில் தான் இருப்பர்.

கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம், தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில் இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.  
   



பிரார்த்தனை
   
 
மகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மாசி மகத்தன்று சிவன், அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம். நோய் நிவர்த்தி பெற, சிவன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்தக் குறை நீங்கவும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.



   
நேர்த்திக்கடன்:
   

  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


கோவில் விவரங்கள் :


  மூலவர்                                     :         மகாலிங்கேஸ்வரர்
 
 அம்மன்/தாயார்                     :         மரகதவல்லி, மாணிக்கவல்லி
 
 பழமை                                              :           1000-2000 வருடங்களுக்கு முன்

 ஊர்                                               :          விராலிப்பட்டி, தவசி மேடை

 மாவட்டம்                             :        திண்டுக்கல்

 மாநிலம்                                     :        தமிழ்நாடு



அமைவிடம் :

திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ.,சென்றால் கோவிலை அடையலாம்


Tuesday, January 28, 2014

அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்-வாணியம்பாடி (வேலூர்)


         அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்-வாணியம்பாடி (வேலூர்)



நட்சத்திர கோவில்கள் :

நட்சத்திரம் : புனர்பூசம்


ஸ்தல வரலாறு :

பிரம்மா சரஸ்வதியிடம், உலக உயிர்களை படைக்கும் நான் தான் பெரியவன். எனவே தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என எனது பெயரை முதலில் கூறுகிறார்கள், எனக் கூறினார். இதைக்கேட்டு கலைமகளுக்கு சிரிப்பு வந்தது. கோபமடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சபித்தார். வருந்திய வாணி பூலோகம் வந்து சிருங்கேரி என்னும் தலத்தில் தவம் இருந்தாள். வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களைத் திருப்திப் படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர். எனவே பலதிசைகளிலும் தேடி, சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார். செல்லும் வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் தங்கினார். இதனால் மகிழ்ந்த சிவனும்,பார்வதியும் வாணிக்கு அருள்செய்து அவளைப்பாடும்படி கூறினர். வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள். (கலை)வாணி பாடிய தலம் என்பதால், இவ்வூர் வாணியம்பாடி ஆனது







ஸ்தல சிறப்பு :

இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார்.




ஸ்தலபெருமை:
   
  மேற்கு நோக்கிய இந்தக் கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயிலை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். ராமபிரான் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.




காச்ய முனிவரின் தர்ம பத்தினி அதிதி. இவள் புனர்பூசம் நட்சத்திரம் தோறும் இத்தலத்தில் விரதமிருந்து தேவர்களை பெற்றாள் என புராணங்கள் கூறுகிறது. எனவே புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் வாணியம்பாடி. மாதம் தோறும் புனர்பூசம் நட்சத்திரத்தில் மளிகைசாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும்.புதுவீடு, வாடகை வீடு பால் காய்ச்சுதல் போன்ற விருத்தியாககூடிய செயல்களை இந்த நட்சத்திரத்தில் செய்வது சிறப்பு வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும், பள்ளிமாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு இங்கு வந்து வாணியை வழிபாடு செய்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆசிரியர்கள் தங்கள் தொழிலை துவங்கும் முன்பும் இங்குள்ள வாணியை வழிபடுவது சிறப்பு. ஹோட்டல் தொழில் செய்பவர்கள் அடிக்கடி இங்கு வந்து அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். இதனால் தங்களது தொழிலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீங்கும் என்பது நம்பிக்கை.  




 திருவிழா:
   
  சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை.  
 

பொது தகவல்:
   
  புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கல்வியில் ஊக்கம் கொண்ட இவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்களாக இருப்பர். ஊர் சுற்றும் சுபாவமும் இயல்பும், ஆடம்பர குணமும் கொண்டிருப்பர். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்ல விரும்ப மாட்டார்கள். பிறரை நன்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். நன்றியுணர்வுடன் உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும். இக்கோயில் பல்லவப்பேரரசர்களால் கட்டப்பட்டது. மூன்று நிலை மேற்கு ராஜகோபுரமும், ஐந்து நிலை கிழக்கு ராஜகோபுரமும் உள்ளது. சிவன் மேற்கு நோக்கியும், சரஸ்வதி கிழக்கு நோக்கியும் உள்ளது சிறப்பு.  



   

பிரார்த்தனை
   
 
புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.



   
நேர்த்திக்கடன்:
   

  பால், தேன், நதிநீர், அன்னம் ஆகியவற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.





கோவில் விவரங்கள் :


மூலவர்                             :         அதிதீஸ்வரர்
 
அம்மன்/தாயார்                :        பெரியநாயகி, பிரகன் நாயகி

 தல விருட்சம்             :        அகண்ட வில்வமரம்

 தீர்த்தம்                             :        சிவதீர்த்தம்

 பழமை                                    :          1000-2000 வருடங்களுக்கு முன்

 புராண பெயர்                    :        வாணியம்மைபாடி

 ஊர்                             :        வாணியம்பாடி

 மாவட்டம்                    :        வேலூர்


 மாநிலம்                        :        தமிழ்நாடு



அமைவிடம் :

வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது. 

Monday, January 27, 2014

அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்-காஞ்சிபுரம்


          அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்-காஞ்சிபுரம்

நட்சத்திர கோவில்கள் :

நட்சத்திரம் : ரோகினி



ஸ்தல வரலாறு :

பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் கவுரவர்களிடம் தன் நாட்டை இழந்தார். ஆளுக்கொரு வீடு வீதம் ஐந்து வீடுகளையாவது கேட்டுவாங்க, துரியோதனனிடம் தூது சென்றார் பகவான் கிருஷ்ணர். அவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். கிருஷ்ணர் அமர்வதற்காக போடப் பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு பெரிய நிலவறையை (பாதாளம்) உண்டாக்கி அதன்மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கிருஷ்ணனும் அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்தது, கிருஷ்ணரும் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்கினர் சில மல்யுத்த வீரர்கள். அவர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார். பாண்டவர்களுக்காக தூது சென்ற இவரை பாண்டவதூத பெருமாள் என்பர்.

பாரத யுத்தம் முடிந்து வெகுகாலத்திற்கு பின், ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக்கதையை கேட்க வந்தார்.கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், என ரிஷியிடம் மன்னர் வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார். பெருமாள், தன் தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.



மங்களாசாசனம் பாடியவர்கள் :

பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்

நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து அன்று வெஃகணை கிடந்தது எண்ணிலாத முண்ணெலாம் அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன் நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே.

-திருமழிசையாழ்வார்.






ஸ்தல சிறப்பு: 

கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும். 


ஸ்தல பெருமை :

கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். பெருமாளின் சிலை 25 அடி உயரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரை, இங்குள்ள கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிப் பிட்டுள்ளனர். கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளுகிறார். எனவே இங்கு அடிப் பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர் களுக்கு துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார்.







எட்டாம் தேதி விசேஷம்: 

ரோகிணி தேவி, இத்தலத்து பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில் ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவிகளை மணந்தார். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த பெருமாளை, இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வணங்க வருவதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன், சனிக்கிழமை, அஷ்டமி திதி, 8ம் தேதிகளில் இங்கு வழிபாடுசெய்வது சிறந்த பலனைத்தரும்.




திருவிழா:
   
  கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம். அருளாளப்பெருமாள் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் நடக்கிறது.


பொது தகவல்:
   
 
ரோகிணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கற்றறிந்தவர்களுடன் நட்பை விரும்புபவராகத் திகழ்வர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் ஊர் சுற்றும் இயல்பைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த நம்பிக்கை உண்டு. இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு இருக்கும். மக்கள் செல்வாக்கு சிறப்பாக இருக்கும். மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.




பிரார்த்தனை :
   
 ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:
   
  கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலம். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72,000 அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு.  


   

கோவில் விவரங்கள் :

மூலவர்                       :              பாண்டவ தூதர்
 
  அம்மன்/தாயார்      :             சத்யபாமா, ருக்மணி
 
        தீர்த்தம்                      :             மத்ஸ்ய தீர்த்தம்
 
  பழமை                              :             1000-2000 வருடங்களுக்கு முன்

  புராண பெயர்               :            திருப்பாடகம்

  ஊர்                              :           காஞ்சிபுரம்

      மாவட்டம்                      :           காஞ்சிபுரம்

      மாநிலம்                      :          தமிழ்நாடு


அமைவிடம் :

காஞ்சிபுரம் மத்தியில் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.