Wednesday, January 1, 2014

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்-புதுப்பாக்கம்



                                  அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்-புதுப்பாக்கம்


ஸ்தல வரலாறு :

இலங்கைக்கு மும்முறை சென்று வந்தவர் அனுமன் மட்டுமே, முதல் முறை ராமதூதனாக கணையாழியுடன் சென்று கண்டேன் சீதையை என்று அறிவித்தது. தீ வைத்து ராவணன் நகரை அழித்தது. மறுமுறை போருக்காக சேதுபந்தனம் அமைத்து, ராமபிரானுடன் சென்றது. மூன்றாவது முறை சஞ்சீவி மலைக்காக இமயம் சென்று வந்தது முதலும் கடைசியும் வான மார்க்கம்.

ராம-ராவண யுத்தம் அதி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. வானர சேனைகள் ராம மந்திரத்தை தாரகமாகக் கொண்டு வெற்றி மேல் வெற்றியைக் குவித்தபடி இருக்கிறார்கள். ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! கோஷம் இலங்கையை மூழ்கடிக்கிறது. ராவண சேனைகள் நாளும் தேய்ந்தன. முக்கியத் தளபதிகள், ராவணனின் தம்பிகள் போன்றோர் வீரமரணம் எய்தினர். இதே நிலை நீடித்தால் தோற்பது உறுதி என்பதை உணர்ந்த ராவணன், கல்ஙகினான். அவனுக்கு ஆறுதல் சொன்னான். அவனது மகன் இந்திரஜித். மறுநாள் போருக்கு அவனே சென்றான். மாயங்கள் பல கற்ற அவன், லட்சுமணனுடன் போரிடும்போது நாகாஸ்திரம் ஏவி, ராமசேனையை முறியடிக்கத் திட்டம் தீட்டுகிறான். ஆதிசேஷனின் அவதாரமான லட்சுமணன் மீது அஸ்திரம் பாய்ந்தது. அவதார நியதிப்படி, சாதாரண மனிதன் போல் அதனை ஏற்று மூர்ச்சையடைத்தான் இளையாழ்வார். வானரசேனைகளும் நாகாஸ்திரத்தின் வீர்யத்தால் தாக்குண்டு மூர்ச்சையடைந்தனர். பாணத்தால் பாதிக்கப்படாதவர்கள் இருவர் மட்டுமே! ஒருவர் ராமபிரான். அடுத்தவர் ஸ்ரீராம நாம மயமாக இருக்கும் வீர ஆஞ்சநேயர்! இளையவனும் இதர வானரவீரர்களும் இறுதி மூச்சை விடப்போகிறவர்கள் போல் மூர்ச்சித்துக் கிடப்பதைக் கண்ட ராமர், ஜாம்பவான் மெதுவாக சுதாரித்து எழுந்து, சஞ்சீவி மலையில் உள்ள அமிர்த் சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்தால் அனைவரும் பிழைப்பர் என்று உபாயம் சொல்ல, உடனே அனுமன் ராமனைப் பணிந்து புறப்பட்டார். மூலிகையை அடையாளம் காண அவகாசம் இல்லாததால், சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்தெடுத்துத் தூக்கி வந்தார். அப்படி வருகையில், வங்காளக் கடலின் ஓரத்தில், மாலை மயங்கும் நேரத்தில் சந்தியா வந்தனம் எனப்படும் நித்ய கர்மாவைச் செய்வதற்காக அனுமன் இறங்கிய இடம்தான் புதுப்பாக்கம்.


 தலபெருமை:
   
 
இங்கு ஆறடி உயரத்தில் ஓர் அழகுச் சிலையாய் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். மலை அடிவாரத்தில் ஆனைமுகன் கோயில் கொண்டுள்ளார். அவரை வணங்கி, அருகில் நவகிரக சன்னதியையும் தரிசித்து, பின் 108 படிகள் ஏறிச் சென்றால் கஜகிரி எனப்படும் குன்றின் உச்சியில் வீர ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். எதிரில் சீதா லஷ்மண சமேதராக ராமபிரான் அருள்பாலிக்கிறார்!


ஆஞ்சநேயர் திவ்ய உருவத்தில், முகம் வடக்கு நோக்கிப் பார்த்தபடி இருக்க(சஞ்சீவி மலை வடக்கில் இருப்பதால்) உடல் கிழக்கு நோக்கி இருக்க(நித்ய கர்மா நீர் நிலையை நோக்கிச் செய்யப்படுதல்), வலது பாதம் தரையில் ஊன்றி, இடது பாதம் பறப்பதற்குத் தயாராக உயர்த்தி தரையில் படாமலும், ஒரு கை பக்தருக்கு அபயம் காட்ட மறுகை இடையிலிருக்க, தலைக்கு மேல் தூக்கிய வாலின் மணியும், நாபிக் கமலத்தில் தாமரைப் பூவுமாக பொலிவுடன் காட்சி தருகிறார் வீர ஆஞ்சநேயர்! ராமர் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி என்பர். அதே போல அனுமன் எங்கிருந்தாலும் அங்கெல்லாம் ராமர் எழுந்தருளி விடுவார். இங்கேயும் அனுமனுக்கு எதிரிலேயே சீதா ராம, லக்ஷ்மணரும்; ராமர் பாதம் பணியும் ஆஞ்சநேயரும் உள்ளனர். இங்கு நித்யர்மாவை முடித்து, பின் அனுமன் சஞ்சீவி பர்வதம் கொண்டு சென்றது, அதனால் விஷம் நீங்கி லக்ஷ்மணர் முதலானோர் எழுந்தது! ராமபிரான் மனமகிழ்ந்து அனுமனை வாழ்த்தியது எல்லாம் நாம் அறிந்ததே! ராமாயண காலத்தில் அனுமன் இங்கு வந்ததால், வியாஸ மகரிஷி அனுமனுக்கு இங்கு கோயில் எழுப்பினார், மொத்தம் 108 அனுமன் கோயில்களை அவர் ஏற்படுத்தியதாக ஐதிகம். அதில் இக்கோயில் 108 திருப்படிகளைக் கொண்டது அபூர்வம். 108 திவ்யத் தலங்களுள் ஒன்றான திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோயிலுக்கு இந்தப் புதுப்பாக்கம் பரிவேட்டைத் தலமாகவும் விளங்குகிறது.

திருவிழா:
   
  அனுமன் ஜெயந்தி, ராமநவமி  
   

பொது தகவல்:
   
  மலைமீது ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சீதா, லட்சுமணருடன் ராமபிரான் அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயரின் தலங்களில் 108 படிகளைக் கொண்டது.  
   

பிரார்த்தனை
   
  பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள அனுமனை வேண்டிச் செல்கின்றனர்.  
   

நேர்த்திக்கடன்:
   
  அனுமனுக்கு வெண்ணெய் காப்பு, வெற்றிலை மாலை சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.  
   



அமைவிடம் :

தாம்பரம்-கேளம்பாக்கம் மார்க்கத்தில் வண்டலூரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்தலம். 

ஜெய் அனுமான் ஜெய் அனுமான் ஜெய் அனுமான்  ஜெய் ஸ்ரீ ராம் 

No comments:

Post a Comment