Tuesday, December 31, 2013

அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்- நாகப்பட்டினம்


   அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்- நாகப்பட்டினம்


ஸ்தல வரலாறு : 

உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டும் என்று பெருமாளை குறித்து தவம் செய்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் இடைஞ்சல் செய்தனர். இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன்பு பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக தரிசனம் தந்தார். பெருமாளின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். இறைவனது பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்த பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும் என பெருமாளிடம் கேட்டான். பெருமாளும் தனது சவுந்தரியமான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி அவன் தவமிருந்த தலத்திலேயே தங்கினார். அழகான இவர் "சவுந்தரராஜப் பெருமாள்' என்றழைக்கப்படுகிறார்.

பெயர்க்காரணம்: நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு "சாரபுஷ்கரணி' என்று பெயரிட்டு அதன் கரையில் அமர்ந்து பெருமாள் குறித்து தவமிருந்தார். பெருமாளும் மகிழ்ந்து தனது படுக்கையாக ஏற்றுக்கொள்வதாக இத்தலத்தில் அருள்புரிந்தார். நாகம் (ஆதிசேஷன்) பெருமாளை ஆராதித்ததால் அவரது பெயராலேயே இவ்வூர் நாகப்பட்டினம் ஆனது.


மங்களாசாசனம் பாடியவர்கள் :

திருமங்கையாழ்வார்

பொன்னிவர் மேனி மரகதத் தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் மின், இவர் வாயில் நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர் தோழி என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா?




தலபெருமை:
   

  தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டாலான மாலை பெருமாளின் இடையை அலங்கரிப்பதை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்ட சாரபுஷ்கரிணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் அவர்கள் சூரிய மண்டலத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளின் அழகில் மயங்கிய நிலையில் 9 பாசுரங்களை பாடிவிட்டு பத்தாவது பாடலில் தான் இத்தலத்தின் பெயரை குறிப்பிடுகிறார். கண்டன், சுகண்டன் என்ற இரு அந்தண சகோதரர்கள் நிறைய கொடுஞ்செயல் புரிந்து வந்தார்கள். ஒருநாள் இவர்கள் சார புஷ்கரிணியில் நீராடினார்கள். உடனே அவர்கள் பாவம் நீங்கி வைகுண்டம் சென்றார்கள்.  இவர்களது சிற்பங்களை பெருமாள் சன்னதியில் வைத்துள்ளார்கள்.



திருவிழா:
   
  பங்குனி பிரம்மோற்ஸவம் 10 நாள், ஆனி உத்திரம் 10 நாள், ஆடிப்பூரத்தில் ஆண்டாளுக்கு 10 நாள் விழா, தை, புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ பூஜை.  
   

 ஸ்தல சிறப்பு:
   
  பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 19 வது திவ்ய தேசம்.நான்கு யுகம் கண்ட இப்பெருமாள் நின்ற, கிடந்த, இருந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் இங்கு எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது. மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன.  
   


திறக்கும் நேரம்:

   
  காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.  
   
 
   
 பொது தகவல்:
   
  இங்கு பெருமாள் கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் திருமஞ்சன திருமேனியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் சவுந்தர்ய விமானம். இங்கு ஆதிசேஷன், துருவன், திருமங்கையாழ்வார், சாலிசுக சோழன் ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், திருக்குருகைப்பெருமான் கவிராயர், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரின் பாடல்கள் இப்பெருமாளின் பேரழகைப் பாடுகின்றன.  
   


பிரார்த்தனை
   
  காலசர்ப்பதோஷம் நீங்கவும், திருமணத்தடைகள் நீங்கவும் இங்குள்ள பெருமாளிடம் பிரார்த்திக்கின்றனர்.  
   



நேர்த்திக்கடன்:
   

  பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசிமாலை சார்த்தி பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.


கோவில் விவரங்கள் :


மூலவர்                           : நீலமேகப்பெருமாள், சவுந்தரராஜப்பெருமாள்

உற்சவர்                           : சவுந்திரராஜர்


அம்மன்/தாயார்           : சவுந்திரவல்லி, உற்சவர்: கஜலட்சுமி

 ஸ்தல விருட்சம்           : மாமரம்

 தீர்த்தம்                           : சார புஷ்கரிணி

 ஆகமம்/பூஜை           : பாஞ்சராத்ர ஆகமம்

 பழமை                           : 1000-2000 வருடங்களுக்கு முன்

 புராண பெயர்                   : சுந்தரவனம்

 ஊர்                                 : நாகப்பட்டினம்

 மாவட்டம்                   : நாகப்பட்டினம்


 மாநிலம்                           : தமிழ்நாடு

அமைவிடம் :

நாகப்பட்டினம் பஸ்ஸ்டாண்டிலிருந்து தெற்கே 1 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. 

ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணா 

Monday, December 30, 2013

அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்- திருச்சேறை (தஞ்சாவூர் )


 அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்- திருச்சேறை (தஞ்சாவூர் )

ஸ்தல வரலாறு :

பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடம் செய்து அதில் வேதங்களை வைத்து காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது. ஒரு முறை காவிரித்தாய் பெருமாளிடம்,""அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும்,''என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். ""தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது,''என காவிரி கூறியவுடன், கருட வாகனத்தில் சங்கு சக்கர தாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து, "வேண்டும் வரம் கேள்' என்றார். அதற்கு காவிரி,""தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும். கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும்,''என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.



மங்களாசாஸனம் பாடியவர்கள் :

திருமங்கையாழ்வார்

பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும் மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம் செய்விரியும் தண்சேறை யெம் பெருமான் திருவடியைச் சிந்தித் தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க் காளாமென் அன்பு தானே.








தலபெருமை:
   
 
பூதேவியின் தந்தை மார்க்கண்டேயர்: மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயர் வீற்றிருக் கிறார் மார்க்கண்டேயர் இத்தலத்தில் தான் முக்தியடைந்தார். உப்பிலி யப்பன் கோயிலில் தனது மகள் பூதேவியை சிறுவயதிலேயே பெருமாள் விரும்புகிறார். அதற்கு மார்க்கண்டேயர்,""சுவாமி! இவள் சிறு பெண். இவளுக்கு சரியாக உப்பு போட்டு கூட சமைக்க தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்கள் எவ்வாறு இவளை திருமணம் செய்து கொள்ள முடியும்,''என்கிறார். அதற்கு பெருமாள்,""இவள் உப்பே போடாமல் சமைத்தாலும், அதை நான் திருப்தியாக ஏற்று கொள்வேன்''என்று கூறி பூதேவியை திருமணம் செய்து கொள்கிறார். அன்றிலிருந்து பெருமாள் உப்பிலியப்பன் என்ற திருநாமத்துடன் உப்பில்லாத நைவேத்தியத்தை ஏற்றுகொள்கிறார்.


மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி சன்னதியின் திருப்பணிக்காக அழகிய மணவாள நாயக்கர் மன்னன் ஆணைப்படி இவ்வூர் வழியாக வண்டிகள் சென்றன. வண்டிக்கு ஒரு கல்வீதம் இக்கோயில் திருப்பணிக்கு நரசபூபாலன் என்பவன் மன்னனுக்கு தெரியாமல் இறக்கி வைத்தான். இதைக்கேள்விப்பட்ட மன்னன் விசாரிக்க இங்கு வந்தான். இதனால் பயந்த நரசபூபாலன், இத்தல பெருமாளை வேண்டினான். பெருமாள் மன்னனுக்கு மன்னார்குடி ராஜகோபாலனாக காட்சி கொடுத்தார். மகிழ்ந்த மன்னன் இக்கோயிலுக்கும் சிறப்பாக திருப்பணிகள் செய்தான்.



திருவிழா:

   
  தைப்பூச விழா பத்து நாள் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேர்விழா. காவிரித்தாய்க்கு காட்சியளித்த தைமாதம், பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இந்த சாரபுஷ்கரணியில் நீராடுவது என்பது மகாமகத்திற்கு ஈடானது என்பதால் இதை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.  
   
 

தல சிறப்பு:
   

  இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்)நிறைந்தது. எனவே தான் தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 15 வது திவ்ய தேசம்.  

   
திறக்கும் நேரம்:

   
  காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
 


   
பொது தகவல்:
   
 
இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார விமானம் எனப்படுகிறது. காவிரித்தாய் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.

கோயில் நீளம் 380 அடி. அகலம் 234 அடி. கிழக்கு நோக்கிய 90 அடி உயர பிரமாண்டமான ராஜ கோபுரம். கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாலிக் கின்றனர். கோயில் உள்பிர காரத்தில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் சன்னதிகள் உள்ளன.

   

பிரார்த்தனை
   
  செய்த பாவங்கள் விலக இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. இத்த பெருமாளை வழிபாடு செய்தால் 100 முறை காவிரியில் குளித்த புண்ணியம் கிடைக்கிறது.  
   

நேர்த்திக்கடன்:

   

  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.  



கோவில் விவரங்கள் :


 மூலவர்                               :               சாரநாதன்

 அம்மன்/தாயார்               :               சாரநாயகி - பஞ்சலெட்சுமி

 தீர்த்தம்                                       :             சார புஷ்கரிணி

 பழமை                                       :               500-1000 வருடங்களுக்கு முன்
 
 ஊர்                                       :               திருச்சேறை

 மாவட்டம்                       :               தஞ்சாவூர்

 மாநிலம்                               :               தமிழ்நாடு



அமைவிடம் :

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் திருச்சேறை என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது 

Sunday, December 29, 2013

அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்-நாச்சியார்கோயில்(தஞ்சாவூர் )


அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்-நாச்சியார்கோயில்(தஞ்சாவூர் )


ஸ்தல வரலாறு :

மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு "வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார். அவர் இங்கு வந்து வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம், ""தாங்கள் என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும்,'' என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், ""நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும்'' என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் "நாச்சியார் கோயில்' என்ற பெயரும் பெற்றது.


மங்களாசாசனம் பாடியவர்கள் :

திருமங்கையாழ்வார்

அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.






தலபெருமை:
   
 
திருமங்கையாழ்வாருக்கு அருளிய பெருமாள்  நீலன் எனும் குறுநிலமன்னனாக இருந்த திருமங்கையாழ்வார் பெருமாள் மீது பக்தி கொண்டு தான் வைத்திருந்த பணத்தையெல்லாம் இறைப்பணிக்கே செலவிட்டார். அவர் வைணவர் அல்லாததால் யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.இதனால் மனம் கலங்கிய அவர் இத்தலம் வந்தபோது மகாவிஷ்ணுவிடம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவருக்காக மனம் இரங்கிய பெருமாள் ஆச்சார்யனாக வந்து "முத்ராதானம்' செய்து வைத்தார். (முத்ராதானம் என்பது ஒருவரை பரிபூரண வைணவராக ஏற்றுக்கொள்வதற்காக அவரது இரு கைகளில் சங்கு, சக்கர அச்சு இடப்படும் அடையாளம்). ஆச்சார்யனாக வந்ததால் இத்தலத்து பெருமாள் 2 கைகளுடன் இருக்கிறார். கையில் சங்கும், சக்கரமும் முத்ராதானம் செய்த கோலத்தில் முன்புறம் தள்ளியும்,  சங்கு திரும்பிய நிலையிலும் இருக்கிறது. தன்னை ஏற்றுக்கொண்டதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தில் 100 பாசுரங்களுக்கு மேல் பதிகங்கள் பாடி சுவாமியை, "நம்பி' என்று சொல்லி மங்களாசாசனம் செய்தார். நம்பி என்றால் பரிபூரணமான நற்குணங்களால் நிறையப்பெற்றவர் என்று பொருள். திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பெருமாள் ஆச்சார்யனாக வந்து முத்ராதானம் செய்துள்ளார்.

சாவிக்கொத்துடன் தாயார்:

ஸ்ரீரங்கம் கோயில், ஆண்டாளால் பெயர் பெற்றிருப்பதுபோல இத்தலமும் தாயாரால் பெயர் பெற்றிருக்கிறது. இங்கு தாயாரை மையப்படுத்தியே கருவறையும் அமைக்கப்பட்டிருக்கிறது. பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. வீதியுலா செல்லும் போதும் இவளே முன்பு செல்ல அதற்கு பின்பே சுவாமி எழுந்தருளுகிறார். இவளுக்கே முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.

கல் கருடசேவை:

இங்கு கருடாழ்வார் தனிச்சன்னதியில் உடலில் 9 நாகங்களுடன் அருளுகிறார். இவருக்கு ஆறுகாலமும் மோதக நைவேத்யம் படைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகிறது என்பது சிறப்பிலும் சிறப்பு. உற்சவ காலங்களில் மரத்தால் அல்லது பிற உலோகங்களால் செய்யப்பட்ட கருடன்தான் வீதியுலா செல்வார். ஆனால், இங்கு கருடசேவையின் போது கற் சிலையாக இருக்கும் மூலவரே வீதியுலா செல்கிறார். இவரை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் நான்கு பேர் இவரை சுமந்து வருவர். பின் அப்படியே 16, 32 எனப்பெருகி இறுதியில் பலர் இவரைச் சுமக்கிறார்கள். இவர் வெளியிலிருந்து மீண்டும் கருவறை நோக்கி வரும்போது அதே எண்ணிக்கையில் ஆட்கள் குறைந்து பின் கருவறையில் வைக்கின்றனர். கருடரால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்புவரையில் உச்சிகால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்ய பொருட்களை உண்டு வந்ததாம். அவற்றின் மறைவிற்கு பிறகு பிரகாரத்தில் அதற்கென தனிச்சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

நாயனார் வணங்கிய பெருமாள்:

கோச்செங்கணர் எனும் சோழ மன்னர் சிவன் மீது கொண்டிருந்த பக்தியால் நாயன்மார்களில் ஒருவராக இடம்பிடித்தவர். 70 சிவாலயங்கள் கட்டி சிவனை வழிபட்ட இவருக்கு வைகுண்டம் செல்ல ஆசை ஏற்பட்டது. எனவே அவர் பெருமாளை வேண்டினார். அவருக்கு இரண்டு கரங்களுடன் காட்சி தந்த பெருமாள் தனக்கு கோயில் கட்டும்படி பணித்தார். அவருக்காக இத்தலத்தில் சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன், கோபுரத்திற்கு அருகில் இருந்து பார்த்தாலும் சுவாமி தெரியும்படி மாடக்கோயில் போல இக்கோயிலைக் கட்டினான் கோச்செங்கட்சோழன். திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் இக்கோயிலை "மணிமாடக்கோயில்' என்று பாடியுள்ளார்.

பஞ்சகிருஷ்ண கோயில்களில் முதலாவதான இத்தலம் முக்தி தரும் 12 தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பிலேயே இருக்கிறது.




 திருவிழா:
 
  மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.
 

தல சிறப்பு:
 
  பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 14 வது திவ்ய தேசம்.
 

திறக்கும் நேரம்:
 
  காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
 

 
பொது தகவல்:
 
 
இங்குள்ளமூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஹேம விமானம் எனப்படுகிறது. பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார் கீழே நவக்கிரகங்கள் மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டிருக்க அதன் மத்தியில் பிரயோக கோலத்தில் இருக்க, அருகில் மேதாவி அவரை வணங்கியபடி உள்ளார். கருட சன்னதிக்கு அருகில் 108 திருப்பதிகளின் உற்சவர் சிலைகள் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்திரத்தில் விசேஷ திருமஞ்சனங்கள் நடக்கிறது.

 

பிரார்த்தனை
 
  வியாழக்கிழமையில் கருடனுக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்தால் திருமண, புத்திர, நாகதோஷம் நீங்கும்.
 

நேர்த்திக்கடன்:
 
  பெருமாளுக்கு துளசி மாலை, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
   

கோவில் விவரங்கள் :


மூலவர்                                          :     திருநறையூர் நம்பி

 உற்சவர்                               :    இடர்கடுத்த திருவாளன்

அம்மன்/தாயார்                  :    வஞ்சுளவல்லி

 தல விருட்சம்                  : வகுளம் (மகிழம்)

 தீர்த்தம்                                  : மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம்,                                                               அனிருத்தம்,சாம்பதீர்த்தம்

  ஆகமம்/பூஜை                  : வைகானஸம்




 பழமை                                  : 1000-2000 வருடங்களுக்கு முன்

 புராண பெயர்                          : சுகந்தகிரி க்ஷேத்ரம்

 ஊர்                                          : நாச்சியார்கோயில்

 மாவட்டம்                          : தஞ்சாவூர்

 மாநிலம்                                  : தமிழ்நாடு


அமைவிடம் :

கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருவாரூர் செல்லும் வழியில் கோயில் இருக்கிறது. 

ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணா 


Saturday, December 28, 2013

அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்- ஆதனூர் (தஞ்சாவூர் )


           அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்- ஆதனூர் (தஞ்சாவூர் )


ஸ்தல வரலாறு :

பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்தார். தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண் டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி "தான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப்பெறும்' என்றார். அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளை திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது 



மங்களாசாசனம் பாடியவர்கள் :

திருமங்கையாழ்வார்

இடரான வாக்கை யிருக்க முயலார் மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு நாதனூ ராதரியார் நானெனதென்னார மலன் ஆதனூர் எந்தை யடியார்.



ஸ்தல சிறப்பு:

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 11 வது திவ்ய தேசம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. 



 தலபெருமை:
   
 
ஏடு, எழுத்தாணி பெருமாள்:
திருமங்கையாழ்வார் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலை திருப்பணி செய்தபோது அவர் வைத்திருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. பணியாளர் களுக்கு கூலி கொடுக்கக்கூட அவரிடம் பணமில்லை. எனவே, தனக்கு பணஉதவி செய்யும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு அசரீரியாக ஒலித்த பெருமாள், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் பணம் தருவதாக சொன்னார். திருமங்கையாழ் வாரும் அங்கு சென்றார். அப்போது வணிகர் ஒருவர் தலைப்பாகை அணிந்து கொண்டு, கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அவர் திருமங்கையாழ்வாரிடம், "உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்ன வேண்டுமென கேளுங்கள்' என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லிய வணிகர் தான் வைத்திருந்த மரக்காலைக் காட்டி ""இம்மரக்கால் கேட்டதைத் கொடுக்கக்கூடியது. ரங்கநாதனை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக்கேட்டால் இம்மரக்கால் கொடுக்கும்'' என்றார். திருமங்கையாழ்வார் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வணிகர், "மரக்காலில் தான் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் அம்மணல் பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவுமே இருக்கும்' என்றார்.திருமங்கையாழ்வாரும் சரியென ஒப்புக்கொள்ள நிறைய பேருக்கு மணலாகவே இருந்தது. கோபம்கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் தந்திரக்காரன் என எண்ணி அவரை அடிக்க பாய்ந்தனர். வணிகர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். திருமங்கையாழ்வார் அவரை பின் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரம் ஓடி வந்த வணிகர் இத்தலத்தில் நின்றார். அவரிடம் திருமங்கையாழ்வார் "நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?' என்றார். மகாவிஷ்ணு, வணிகனாக வந்து அருளியது தானே என உணர்த்தி அவருக்கு காட்சியளித்தார். ஏட்டில், எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.



படியளக்கும் சுவாமி: 
கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கிறார். இவர் மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி, ஏடுடன் காட்சி தருகிறார். இதனை உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாக பள்ளிகொண்டிருக்கும் கோலம் எனவும் சொல்கிறார்கள். காமதேனு சுவாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி இருக்கிறாள். சிவன், பிரம்மாவின் ஒரு தலையை எடுக்க அந்த தலை அவரது கையுடனே ஒட்டிக்கொண்டது. சிவனால் தலையை தனியே எடுக்க முடியவில்லை. எனவே அந்த தலையை எரிக்கும்படி அக்னிபகவானிடம் கேட்டுக் கொண்டார் சிவன். அக்னி எவ்வளவோ முயன்றும் அவராலும் தலையை எரிக்க முடியாமல் போனதோடு பிரம்மஹத்தி தோஷமும் பிடித்துக்கொண்டது. அவர் இங்கு பெருமாளை வணங்கி சாபம் நீங்கப்பெற்றார். இவர் கருவறையில் சுவாமியின் பாதத்திற்கு அருகில் இருக்கிறார். அருகில் பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோரும் இருக்கின்றனர்.



மோட்சம் தரும் தூண்கள்: 
பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதேபோல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் சுவாமியின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது. இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும்,திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங் கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்யதேசங்களில் இங்கும், ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது.



திருவிழா:
   
  வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.  
   

திறக்கும் நேரம்:
   
  காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.



பொது தகவல்:
   
 
இத்தல இறைவன் பள்ளிகொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பிரணவ விமானம் எனப்படும். இங்குள்ள ராஜகோபுரம் 3 நிலைகளைக் கொண்டது. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோயில் இருக்கிறது. மகாவிஷ்ணுவை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் "ஆதனூர்' (ஆ, தன், ஊர்) என்று பெயர் பெற்றது. கருவறை விமானத்தில் 7 பூதகணங்களின் மத்தியில் வடக்கு பார்த்தபடி மகாவிஷ்ணுவின் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை பல்லாண்டுகளாக வளர்ந்து வருவதாக சொல்கிறார்கள்.
 
   
 
பிரார்த்தனை
   
 
இங்கு வேண்டிக்கொண்டால் கல்வியில் சிறக்கலாம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
 
   
நேர்த்திக்கடன்:
   
  சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ நைவேத்யம் படைத்து வழிபடலாம்.  
   

கோவில் விவரங்கள் :

     மூலவர்                          :     ஆண்டளக்கும் ஐயன்

     உற்சவர்                          :     ஸ்ரீரங்கநாதர்

    அம்மன்/தாயார்          :      பார்க்கவி

    தல விருட்சம்          :      புன்னை, பாடலி

    தீர்த்தம்                          :       சூர்ய, சந்திர தீர்த்தம்

   ஆகமம்/பூஜை          :      பாஞ்சராத்ரம்

   பழமை                          :       1000-2000 வருடங்களுக்கு முன்
 
   ஊர்                                  :      ஆதனூர்

  மாவட்டம்                  :       தஞ்சாவூர்

  மாநிலம்                          :      தமிழ்நாடு


அமைவிடம் :

கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. இங்கிருந்து 3 கி.மீ., தூரத்தில் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை இருக்கிறது. 

ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணா 

Friday, December 27, 2013

அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில் -கபிஸ்தலம்



                 அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில் -கபிஸ்தலம்


ஸ்தல வரலாறு :

இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வ காலமும் விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில் யாரும் அவனை காண வருவதுமில்லை. இவனும் யாரையும் காண்பதுமில்லை. இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் கோபக்கார துர்வாச முனிவர் அவனைக்காண வந்தார். இவர் வந்து வெகு நேரம் ஆனது. ஆனாலும் மன்னன் தன் பக்திக்குடிலை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த துர்வாசர், மன்னன் இருந்த குடிலுக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும் கூட மன்னன் வந்திருப்பதை அறியாமல் ஆழ்ந்த பக்தியில் மூழ்கியிருந்தான். இதனால் முனிவர் கடும் கோபத்துடன் உரத்த குரலில்,""மன்னா! நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும் இருப்பதாலும், நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்,''என சபித்தார். முனிவர் போட்ட கடும் சத்தத்தினால் கண்விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும், பாவி விமோசனமும் கேட்டான். இவனது நிலையுணர்ந்த முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு, ""நீ யானையாக இருந்தாலும், அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்'' என்று கூறினார். அத்துடன்,""ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ "ஆதிமூலமே!' என மகாவிஷ்ணுவை அழைக்க, அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி, உனக்கு மோட்சமும், சாப விமோசனமும் கிடைக்கும், ''என்றார். ஒரு முறை கூஹு என்னும் அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரில் இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவ பூஜை செய்யும் நேரம் வந்தது. அருகிலிருந்த குளத்தில் நீராடினார். அங்கு இருந்த அரக்கன் அகத்தியரின் காலைப்பிடித்தான். இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர்,""நீ வருபவர்களையெல்லாம் காலைப்பிடித்து இழுப்பதால், முதலையாக மாறுவாய்,''என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான். அகத்தியர்,""கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன் காலைப்பிடிப்பாய், அப்போது அதைக்காப்பாற்ற திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்,''என்றார். இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக்கண்ட முதலை யானையின் காலைக்கவ்வியது."ஆதிமூலமே! காப்பாற்று' என யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக விஷ்ணு வந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித் ததாக வரலாறு.



மங்களாசாசனம் பாடியவர்கள் :

திருமழிசையாழ்வார்

கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ மாற்றமும் சாரா வைகயறிந்தேன்- ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத் தெனக்கு

 
திருவிழா:
   
  ஆடி பவுர்ணமி கஜேந்திர மோட்சலீலை. வைகாசி விசாகம் தேர், பிரமோற்சவம். பெருமாளுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடக்கிறது.  
   

தல சிறப்பு:
   
  பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 9 வது திவ்ய தேசம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
   

திறக்கும் நேரம்:
   
  காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.  
   

பொது தகவல்:
   
  இத்தல இறைவன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ககனாக்ருத விமானம் எனப்படும். கஜேந்திரன் என்ற இந்திராஜும்னன், முதலை யாயிருந்த கூஹு, பராசரர், ஆஞ்சனேயர் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.  
   
 
பிரார்த்தனை
   
  ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.  
   


நேர்த்திக்கடன்:
   
  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.  
   
தலபெருமை:
   
  இத்தலபெருமாளை ஆழ்வார், "ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்,' என பாடினார். அன்றிலிருந்து கண்ணன் என்ற பெயரே பெருமாளுக்கு வழங்கி வருகிறது. திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக் கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான், பெருமாள் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.  


அமைவிடம் :

கும்பகோணத்திலிருந்து (10 கி.மீ.) திருவையாறு செல்லும் வழியில் கபிஸ்தலம் உள்ளது. 

 
      மூலவர்      :         கஜேந்திர வரதர் (ஆதிமூலப்பெருமாள், கண்ணன்)
    
   உற்சவர்      :         செண்பகவல்லி

அம்மன்/தாயார்  :         ரமாமணி வல்லி, பொற்றாமரையாள்

 தல விருட்சம்   :          மகிழம்பூ

 தீர்த்தம்             :        கஜேந்திர புஷ்கரிணி, கபில தீர்த்தம்

 ஆகமம்/பூஜை   :        வைகானச ஆகமம்

 பழமை             :       1000-2000 வருடங்களுக்கு முன்

 புராண பெயர்     :        திருக்கவித்தலம்

 ஊர்                 :       கபிஸ்தலம்

 மாவட்டம்     :      தஞ்சாவூர்

 மாநிலம்             :      தமிழ்நாடு

ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணா