Wednesday, December 25, 2013

அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்-திருச்சி



           அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்- அன்பில் (திருச்சி)

ஸ்தல வரலாறு :

ஒருசமயம் பிரம்மாவுக்கு உலகில் உயிர்களை நாமே பிறக்க வைக்கிறோம். ஒவ்வொரு உயிரும் அழகுடன் இருப்பதற்கும் நாம்தான் காரணமாக இருக்கிறோம். அந்த அழகிய உயிர்களுக்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் நாம்தான் அனைவரிலும் அழகானவர் என்ற ஆணவம் உண்டானது. மேலும், அனைவரையும் படைக்கும் தன்னை யாரும் வணங்குவதில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது. பிரம்மாவின் எண்ணத்தை அறிந்த மகாவிஷ்ணு, அவரது ஆணவத்தை விட்டுவிடும்படி சொல்லிப்பார்த்தார். பிரம்மாவோ கேட்பதாக இல்லை. எனவே, அவரை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்துவிட்டார் மகாவிஷ்ணு. பூலோகம் வந்த பிரம்மா ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று சுவாமியை வணங்கி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வேண்டி வந்தார். இத்தலம் வந்த அவர் சுவாமியை எண்ணி தவம் இருந்தார். அப்போது மகாவிஷ்ணு பேரழகு வாய்ந்த மனிதராக அவர் முன்பு வந்தார். அவரைக் கண்ட பிரம்மா, "இவ்வளவு அழகான எவரையும் இதுவரையில் நான் பார்த்ததில்லையே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' எனக்கேட்டார். அவரிடம் அன்பாக பேசிய விஷ்ணு, "அழகு என்பது நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது. இவ்விரண்டு குணங்களையும் கொண்டிருப்பவர் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதில்லை' என உபதேசம் செய்து, பள்ளிகொண்ட கோலத்தில் அவருக்கு காட்சி தந்தார் மகாவிஷ்ணு. உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மா ஆணவம் ஒழியப்பெற்றார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக, விஷ்ணு இத்தலத்தில் பள்ளிகொண்ட கோலத்திலேயே எழுந்தருளினார். பிற்காலத்தில் சோழமன்னர் ஒருவர் இங்கு கோயில் கட்டினார். பிரம்மாவின் மீது அன்பு கொண்டு அவருக்காக மகாவிஷ்ணு எழுந்தருளிய தலம் என்பதால் இத்தலம் "அன்பில்' என்ற பெயரும் பெற்றது.


மங்களாசாசனம் பாடியவர்கள் :

திருமழிசையாழ்வார்

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத் தணையரங்கம் பேர் அன்பில்-நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால் அணைப் பார் கருத்தனாவான்.



ஸ்தல சிறப்பு: 

பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதைப்போல, இங்கும் சுவாமி தாரகவிமானத்தின் கீழ் இருக்கிறார். இவ்விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பில் இருப்பது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 5 வது திவ்ய தேசம்


தலபெருமை:
   
 
சுதபா எனும் மகரிஷி ஒருவர் தன் தவ வலிமையால் நீரிலும், நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டவராக இருந்தார். மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டிருந்த அவர் ஒருநாள் தண்ணீருக்கடியில் தவம் செய்து கொண்டிருந்தபோது, அவரைப் பார்க்க துர்வாச முனிவர் வந்தார். சுதபா தவத்தில் இருந்ததால், துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை. நீண்டநேரம் வெளியில் காத்திருந்ததால் கோபம் கொண்ட துர்வாசர் அவரை தண்ணீரில் வாழும் தவளையாக மாறும்படி சபித்துவிட்டார். இதனால் சுதபா மகரிஷிக்கு மண்டுகர் (மண்டுகம் - தவளை) என்ற பெயர் ஏற்பட்டது. துர்வாசரின் சாபத்திற்கு ஆளான மண்டுகர் அவரிடமே தனது சாபத்திற்கு விமோசனம் கேட்டார். துர்வாசர் அவரிடம், "உனக்கு கிடைத்த இந்த சாபம் முற்பிறவியில் செய்த கர்மத்தால் கிடைத்ததாகும். தகுந்த காலத்தில் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்கப்பெற்று சாபவி மோசனம் பெறுவாய்,' என்றார். அதன்படி மண்டுக மகரிஷி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (மண்டுகதீர்த்தம்) சுவாமியை எண்ணி தவம் செய்து வந்தார். மகாவிஷ்ணு அவருக்கு சுந்தர்ராஜராக காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். 




சுவாமி கருவறையில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மாவுடன் இருக்கிறார். உத்தமர் கோயிலில் தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற சிவன், இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளை தரிசனம் செய்துவிட்டுச் சென்றார். 

அமர்ந்த நிலையில் ஆண்டாள்:

முன்மண்டபத்தில் ஆண்டாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நின்ற கோலத்தில் இருக்க உற்சவர் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். ஒரே சமயத்தில் ஆண்டாளின் இரு கோலங்களையும் தரிசனம் செய்வது அபூர்வம். திருமண தோஷம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. தேவலோக கன்னியான ஊர்வசி தன் அழகு மீது கர்வம் வந்துவிடாமல் இருப்பதற்காக இவரை வணங்கிச் சென்றுள்ளாள்.



திருவிழா:
   
  மாசியில் தீர்த்தவாரி திருவிழா மற்றும் வைகுண்ட ஏகாதசி.  




பொது தகவல்:
   
  108 திவ்ய தேசங்களில் இத்தலம் 4வது தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் நரசிம்மர், வேணுகோபாலர், லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், 12 ஆழ்வார்கள் ஆகியோர் இருக்கின்றனர். இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தூரத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் கோயில் இருக்கிறது. இங்கும் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கிறார். திருச்சி, திருப்பேர்நகர், திருஅன்பில் என அருகருகே மூன்று பள்ளிகொண்ட பெருமாள்களை தரிசனம் செய்வது விசேஷமான பலன்களைத் தரும் என்கிறார்கள். மூலவரின் விமானம் தாரக விமானம் எனப்படுகிறது.  
   

பிரார்த்தனை
   
  திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் தாயார், ஆண்டாளை வேண்டுகின்றனர்.  
   


நேர்த்திக்கடன்:
   
  தாயார், ஆண்டாளுக்கு விசேஷ திருமஞ்சனங்கள் செய்கின்றனர்.  
        

                          மூலவர்                 : சுந்தர்ராஜப்பெருமாள்
                     
                          உற்சவர்         : வடிவழகிய நம்பி

                  அம்மன்/தாயார் :   அழகியவல்லி


                        தல விருட்சம்         : தாழம்பூ

                      தீர்த்தம்                 : மண்டுக தீர்த்தம்

                ஆகமம்/பூஜை         : பாஞ்சராத்ரம்

                     பழமை                : 1000-2000 வருடங்களுக்கு முன்

                புராண பெயர்        : திரு அன்பில்

                  ஊர்                        : அன்பில்

                      மாவட்டம்                : திருச்சி


                   மாநிலம்                : தமிழ்நாடு

அமைவிடம் :

திருச்சியில் இருந்து 26 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட், லால்குடியில் இருந்து பஸ் வசதி உண்டு. 

ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணாஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணா

No comments:

Post a Comment