Thursday, December 26, 2013

அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்- கண்டியூர் (தஞ்சாவூர் )


     அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்- கண்டியூர்


ஸ்தல வரலாறு :

சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று ஐந்து திருமுகங்கள் உண்டு. இதே போல் பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்த காலம் அது. அதனால் சிவனுக்கு ஈடாக தன்னையும் நினைத்து கர்வத்துடன் பிரம்மா செயல்பட்டு வந்தார். இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் நடுத்தலையை கிள்ளியெறிந்தார். இந்த பிரம்மஹத்தி தோஷத்தை தொலைக்க, கையில் ஒட்டிய பிரம்மனின் கபாலத்துடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார். ஒரு இடத்தில் அந்த கபாலம் விழுந்தது. அங்கே விஷ்ணு இருந்தார். அந்த தலமே பூரணவல்லி தாயார் சமேத ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்.


மங்களாசாசனம் பாடியவர்கள் :

திருமங்கையாழ்வார்

பிண்டியார் மண்டையேந்தி பிறர்மனை திரிதந்துண்ணும் உண்டியான் சாபந்தீர்த்த ஒருவனூர் உலகமேத்தும் கண்டியூர ரங்கம் கச்சிபேர் மல்லை யென்று மண்டினார் குயலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே.




தலபெருமை: 


சிவனின் (ஹரன்) சாபம் தீர்த்ததால், இங்குள்ள பெருமாள் "ஹரசாப விமோசனப் பெருமாள்' என்றழைக் கப்படுகிறார். பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டினார் என புராணங்கள் கூறுகிறது. இதே ஊரில் சிவபெருமானும் குடிகொண்டார். அவருக்கு "கண்டீஸ்வரர்' எனப் பெயர். இத்தலம் ஒரு மும்மூர்த்தி தலமாகும். பிரம்மனுக்கு கோயில் கிடையாது என்பதால், கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி சமேதராக பிரம்மன் அருள்பாலிக்கிறார். "ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற நூலை எழுதிய நாராயண தீர்த்தர் கண்டியூர் அருகிலுள்ள திருப்பூந்துருத்தியை சேர்ந்தவர். இவர் இத்தல பெருமாளின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். திருமங்கையாழ்வார் இத்தலத் தில் பாடிய பாடலில் இங்குள்ள பெருமாளை, ஸ்ரீரங்கம் பெருமாள், காஞ்சி பெருமாள், கோயிலடி பெருமாள் ஆகிய பெருமாள்களுடன் ஒப்பிட்டு பாடுகிறார்.




திருவிழா:
   
  பங்குனியில் பிரமோற்சவம், ஐப்பசியில் பவித்திர உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை தீபம்.  
   


தல சிறப்பு:
   
  பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 7 வது திவ்ய தேசம் இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர்.  
   



திறக்கும் நேரம்:
   
  காலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  
   

முகவரி:

   
  அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், கண்டியூர்- 613202. தஞ்சாவூர் மாவட்டம்.  

   

பொது தகவல்:
   
  இத்தல இறைவன் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கமலாக்ருதி விமானம் எனப்படுகிறது. சிவபெருமான், அகத்தியர் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.  
   



பிரார்த்தனை
   
  சிவனுக்கே தோஷம் போக்கிய தலமாதலால், இத்தல பெருமாளை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.  
   

நேர்த்திக்கடன்:
   
  பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.  

 
கோவில் விவரங்கள் :

        மூலவர்               :    ஹரசாப விமோசன பெருமாள், கமல நாதன்

          உற்சவர்               :    கமல நாதன்

        அம்மன்/தாயார்      :    கமலவல்லி நாச்சியார்
 
         தீர்த்தம்                :    கபால மோட்ச புஷ்கரிணி.

        ஆகமம்/பூஜை         :    வைகானசம்

              பழமை                 :     1000-2000 வருடங்களுக்கு முன்

        புராண பெயர்        : கண்டன சேத்திரம், பஞ்ச கமல சேத்திரம்

        ஊர்                        : கண்டியூர்


       மாவட்டம்                : தஞ்சாவூர்


       மாநிலம்                 : தமிழ்நாடு

அமைவிடம் :

தஞ்சாவூரிலிருந்து (8 கி.மீ) திருவையாறு செல்லும் வழியில் உள்ள கண்டியூருக்கு பஸ் உள்ளது. 

ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணாஒம் நமோ நாராயணா







No comments:

Post a Comment