அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்- பண்பொழி (திருநெல்வேலி )
நட்சத்திர கோவில்கள் :
நட்சத்திரம் : விசாகம்
ஸ்தல வரலாறு :
ஒரு காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும், என்றார்.
அதன்படியே அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன் பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார். பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பினர்.இக்கோயிலிலுக்கு ஏற 623 படிகள் உள்ளன. அவை அனைத்தும், ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் உறையும் தேவபடிக்கட்டுக்கள். எனவே இங்கு முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் நமது சந்ததி தழைக்கும் என்பது ஐதீகம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன. சிவகாமி பரதேசி என்ற அம்மையார் இங்கு மண்டபம் எழுப்ப கற்களை கீழிருந்தே வாழைமட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி அதை மலையில் இழுத்துக் கொண்டே சென்று சேர்த்தார் என்பது சிறப்பம்சம்.
ஸ்தல சிறப்பு:
பந்தளமன்னர் எழுப்பிய கோயில் இது.இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை உள்ளிட்டவை உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.
தலபெருமை:
இக்கோயில் திருப்பணிக்காலத்தில் கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டன. கனத்த பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறு மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டன. சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டு. தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும். அப்போது, இப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது முருகா எனக்கூறிக்கொண்டு தன் தலையை கொடுத்து தடுத்து நிறுத்துவாராம். மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும் வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம். இப்படி அற்புத சாதனையை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார். மேலும், வாழைமட்டைகளில் செங்கல் ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்தும் சென்று திருப்பணிக்கு உதவியுள்ளார். இவருக்கு இக்கோயிலில் சிலை இருக்கிறது.
மூக்கன்:
இக்கோயிலின் அர்ச்சகர் பூவன்பட்டர், கோட்டைத்திரடு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தை அகழ்ந்த போது, முருகன் சிலையில் மூக்கில் கடப்பாரை பட்டு சிறு துளி உடைந்து விட்டது. அந்த உடைசல் கூட பார்ப்பதற்கு அழகாக இருந்தது. கிராமப்புறத்து மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக மூக்கன் என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்கள். நெல்லை மாவட்ட கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் சூட்டப்படும். இது திருமலை முருகனின் பெயர் தான். மேலும், குழந்தை பிறந்து தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஆண் குழந்தைகளும் பதினைந்து வயது வரை கூட மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் காண முடியும். இரண்டு குழந்தைகள் தவறி, மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு இந்தச் சடங்கை செய்வது மரபாக உள்ளது.
பந்தளமன்னர் எழுப்பிய கோயில்:
பந்தளமன்னர் எழுப்பிய கோயில் எது என யாரைக் கேட்டாலும், இது தெரியாதா! சபரிமலை ஐயப்பன் கோயில், என்பார்கள். பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள் தான் கேரள எல்லையிலுள்ள திருமலைக் கோயிலையும் எழுப்பியுள்ளனர். இக்கோயில் உருவாக காரணமாக இருந்த பூவன் பட்டரின் வேண்டுகோளின்படி பந்தளமன்னர் இக்கோயிலை எழுப்பியுள்ளார். இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை உள்ளிட்டவை உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழை மட்டையில் கல் ஏற்றி இழுத்தவர்:
பண்பொழி அருகிலுள்ள அச்சன்புதூரில் சிவகாமி அம்மையார் வசித்து வந்தார். இவரது கணவர் கங்கைமுத்து தேவர். இவர்களுக்கு குழந்தை இல்லை. திருமலை முருகனை வணங்கி, குழந்தை வரம் கோரினார். கோயிலில் கல் மண்டபம் ஒன்றை அமைக்கவும் அவர் முடிவெடுத் தார். இதற்கான கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் ஏற்றி, மேலே இழுத்துச் செல்வார். அப்படிப்பட்ட வைராக்கியமான பக்தி அவருடையது. இவ்வளவு சேவை செய்தும் அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லை. தான் கட்டிய கல்மண்டபத்தில் வந்து தங்கிய வரதர் மஸ்தான் என்ற மகானிடம் தன் குறையைத் தெரிவித்தார். அந்த மகான் அவரிடம், இந்த திருமலை முருகனையே உன் குழந்தையாக ஏற்றுக்கொள், என்றதும், அவருக்கே தன் சொத்துக்களை எழுதி வைத்தார். மேலும், புளியரை என்ற கிராமத்தில் முருகனுக்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை அனுபவித்து வந்த சிலர் மீது, திருவனந்தபுரம் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி அவற்றை மீட்டு தன் பிள்ளையான முருகனுக்கே சேர்த்தார். இந்த கல்வெட்டின் நகல்படிவம் இப்போதும் உள்ளது. இந்த அம்மையார் முருகனுக்கே தொண்டு செய்து துறவு பூண்டதால் சிவகாமி பரதேசி அம்மையார் என்று அழைக்கப்பட்டார்.
மலைப்பாதை:
திருமலை 500 அடி உயரமுடையது. 544 படிகள் ஏறி கோயிலை அடைய வேண்டும். இதை திரிகூடமலை என்றும் சொல்வர். இரண்டு மலைகள் இந்த மலையினைத் தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. மலைப்பாதையின் துவக்கத்தில் வல்லபை விநாயகர் சன்னதி உள்ளது. இவரை வணங்கி, அடிவாரத்திலுள்ள பாதமண்டபத்தைத் தரிசித்து படியேற வேண்டும். இரண்டு பாதங்கள் இந்த சன்னதியில் உள்ளன. பாதையின் நடுவில் நடுவட்ட விநாயகர் சன்னதி உள்ளது. பின்னர் இடும்பன் சன்னதியை வணங்க வேண்டும்.
அஷ்டபத்ம குளம்:
மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்தத்தை அஷ்டபத்ம குளம் என்று அழைத்தனர். இந்தக் குளத்திற்கு தற்போது பூஞ்சுனை என பெயரிட்டுள்ளனர். இங்கு இலக்கியங்களில் நாம் படித்த குவளை என்னும் மலர் இதில் பூத்தது. தினமும் ஒரு மலர் தான் இந்தக் குளத்தில் பூத்ததாம். அதை கரையில் இருந்த சப்த கன்னிமார் எழுவரும் முருகனை பூஜித்தனர். சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், இது முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது சிறப்பு. உமையவளின் ஏழு சக்திகளே சப்தகன்னியர் ஆவர்.
விசாக நட்சத்திர கோயில்:
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியாவிட்டாலும் இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது நிஜம். வி என்றால் மேலான என்றும், சாகம் என்றால் ஜோதி என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.
மலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார்:
மலை உச்சியில் ஒரு உச்சிப்பிள்ளையார் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் 16 கல் படிகள் உள்ளன. இவரை சோடச விநாயகர் என்பர். 16படிகள் ஏறி தரிசிப்பதால், இவரை வணங்குவோருக்கு பதினாறு செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அன்னதானம்:
ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் மாதாந்திர முழுக்காப்பு அடியார்கள் சபை சார்பில் இங்கு அன்னதானம் காலை 6மணி முதல் இரவு வரை தொடர்ந்து வழங்கப்படுகிறது.
பொது தகவல்:
விசாகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: வியாபாரத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவர். நடக்காததையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் பெற்றவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் இருக்கும். தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து கொள்ளும் இவர்கள், திறமைசாலிகளாகவும் இருப்பர். தானதர்மம் செய்வதில் அக்கறை காட்டுவர். இங்குள்ளமூலவருக்கு மூக்கன் என்று ஒரு பெயர் உண்டு. மலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் உள்ளன. மலைமீது திருமலைக்காளி அருள்பாலிக்கிறாள். விநாயகர் சன்னதிக்கு 16 படிக்கட்டுகள் உள்ளன. 16 செல்வங்களும் 16 படிக்கட்டுக்களாக இருப்பதாக கூறுகிறார்கள்.
பிரார்த்தனை
விசாகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். வேண்டியதையெல்லாம் கொடுக்கும் அருள்கடவுளாக உள்ளார்.
கோவில் விவரங்கள் :
மூலவர் : முத்துக்குமாரசுவாமி
தீர்த்தம் : பூஞ்சுனை
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : பண்பொழி
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
அமைவிடம் :
மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம்.
திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை பக்கமே அங்கிருந்து செல்லலாம் ...
மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம்.
திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை பக்கமே அங்கிருந்து செல்லலாம் ...