Friday, January 3, 2014

அருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில்-தஞ்சாவூர்


     அருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில்-தஞ்சாவூர்

ஸ்தல வரலாறு :

பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார். அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே அசுரர்களை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப்பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், ""எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும், எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்'' எனக் கேட்டான். அவரும் அருள்புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் "தஞ்சமாபுரி' எனப்பட்டது.தஞ்சகனின் அழிவைக்கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.

மங்களாசாசனம் பாடியவர்கள் :

பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்

எம்பிராணெந்தை யென்னுடைச் சுற்றம் எனக்கர சென்னுடை வானாள் அம்பினா லரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுந்தவெம் மண்ணல் வம்புலாஞ் சோலைமாமதில் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.



ஸ்தலபெருமை:
   
 
சக்கரத்தாழ்வாரான பெருமாள்:

வீரநரசிம்மர் கோயிலில் சக்கரத்தில் மகாவிஷ்ணுவே சக்கரத்தாழ்வாராக இருக்கிறார். இவர் வலப்புறத்தில் இருக்கும் யானையின் மீது கை வைத்து தடவிக்கொடுத்தபடி இருக்க, இடப்புறத்தில் ஒருவர் சுவாமியை வணங்கியது போல சிலை அமைப்பு இருக்கிறது. இந்த வடிவம் யானை வடிவம் எடுத்த தஞ்சகாசுரனையும், அவன் திருந்தி மகாவிஷ்ணுவை வணங்குவதையும் குறிப்பதாக சொல்கிறார்கள். மனதில் தீய குணங்களுடன் இருப்பவர்கள் இவரை வணங்கினால் மன்னிப்பு பெறலாம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. இவருக்கு பின்புறத்தில் நரசிம்மர் யோகபட்டையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் இரண்யகசிபு, பிரகலாதன் ஆகியோர் இருக்கின்றனர். இந்த சக்கரத்தாழ்வார் வடிவ பெருமாளின் தரிசனம் மிகவும் விசேஷமானது.


வலவந்தை நரசிம்மர்:

நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி, நீலமேகப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் அவருக்கு வலப்புறத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறார். இவரை "வலவந்தை நரசிம்மர்' என்கின்றனர். அசுரனை அழித்த நரசிம்மர், இதயம் கோபத்தில் துடித்துக்கொண்டிருக்க இத்தலத்தில் அமர்ந்தார். கோபம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதில்லை. எனவே அவள் நரசிம்மருக்கு வலப்புறத்தில் அமர்ந்துகொண்டாள். கோபப்படும் குணம் கொண்டவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்காது என்பதை இந்த வடிவம் நமக்கு உணர்த்துகிறது. அதிகமாக கோபப்படுபவர்கள் இவரை வணங்கி மன
அமைதி பெறலாம்.

மூன்றும் சேர்ந்து ஒன்று:

அசுரர்களை அழித்த மகாவிஷ்ணு இங்கு நீலமேகர், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் தனித்தனி கோயில்களில் அருளுகிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இம்மூவரையும் சேர்த்தே மங்களாசாசனம் செய்துள்ளனர். இதனால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது. திருமணங்கொள்ளையில் மகாவிஷ்ணுவிடம் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டாவதாக மங்களாசாசனம் செய்துள்ளார். வீரநரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூன்று மூலவர்களுக்கும் தைலக்காப்பு மட்டுமே செய்யப்படுகிறது.  நீலமேகப்பெருமாள் உற்சவராக கையில் செங்கோல் ஏந்தியபடியும், உற்சவர் தாயார் அக்னி கிரீடம் அணிந்து கொண்டு சாந்தமான கோலத்தில் காட்சி தருவதும் சிறப்பு. இவரது கருவறையில் பராசரர் சுவாமியை வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு பார்த்தபடி இருக்கிறார். கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி ஆகிய இருவருக்கும் ஏலக்காய் மாலை சாத்தி, நெய்விளக்கு, கற்கண்டு நைவேத்யம் படைத்து வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.



திருவிழா:
   
  பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில் மூன்று பெருமாள்களுக்கும் தொடர்ந்து பிரம்மோற்ஸவங்கள் நடக்கிறது. வைகாசியில் 18 கருடசேவை திருவிழா விசேஷம்.  
   

ஸ்தல சிறப்பு:
   
  பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 20 வது திவ்ய தேசம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
   

பொது தகவல்:
   
  இத்தல இறைவன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். சிங்கப்பெருமாள் கோயிலில் வீர நரசிம்மர், முன் மண்டபத்தில் யோக நரசிம்மர், நீலமேகப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர், தாயார் சன்னதியில் உள்ள தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என இத்தலத்தில் பஞ்ச நரசிம்மர்கள் காட்சி தருகின்றனர்.  
   

பிரார்த்தனை
   
  பிரதோஷ வேளையில் வீரநரசிம்மரை வழிபட்டால் வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறும்.  
   

நேர்த்திக்கடன்:
   
  நீலமேகர், மணிக்குன்ற பெருமாளுக்கு சர்க்கரைப்பொங்கல், நரசிம்மருக்கு பானகம் படைத்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.  
      


கோவில் விவரங்கள் :

மூலவர்                        : நீலமேகர், வீரநரசிம்மர், மணிக்குன்றர்

உற்சவர்                       :         நாராயணர்


அம்மன்/தாயார்       :         செங்கமலவல்லி, தஞ்சைநாயகி, அம்புஜவல்லி

 தல விருட்சம்       :         மகிழம்

 தீர்த்தம்                       :        அமிர்த தீர்த்தம்

 ஆகமம்/பூஜை       :         வைகானஸம்

 பழமை                       :         1000-2000 வருடங்களுக்கு முன்

 புராண பெயர்               :         தஞ்சமாபுரி, வெண்ணாற்றங்கரை

 ஊர்                               :         தஞ்சாவூர்

மாவட்டம்                  :    தஞ்சாவூர்


மாநிலம்                       :         தமிழ்நாடு


அமைவிடம் :

தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 3 கி.மீ., தொலைவில் சிங்கப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலுக்கு அருகிலேயே மற்ற இரு கோயில்களும் அமைந்திருக்கிறது. 


ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணா ஒம் நமோ நாராயணா 

No comments:

Post a Comment