Sunday, January 19, 2014

அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில் -திருவலம் (வேலூர் )


   அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில் -திருவலம் (வேலூர் )


ஸ்தல வரலாறு :

திருவல்லத்தில் வாழ்ந்த அர்ச்சகர் ஒருவர், அருகில் உள்ள கஞ்சன் மலையிலிருந்து சுவாமியின் அபிஷேகத்திற்காக தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம். அந்த மலையில் இருந்த கஞ்சன் என்ற முரடன் தொல்லை கொடுத்து வந்தான். அர்ச்சகரும் இறைவனிடம் முறையிட, ஈசன் தன் வாகனமான நந்தியிடம் அந்த முரடனை அடக்குமாறு கட்டளையிட்டார்.

நந்தி அரக்கனை எட்டு பாகங்களாக கிழித்து போட்டது. சிவனிடம் சாகா வரம் பெற்றிருந்த அந்த முரடன், நந்தியின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டான். அவன் மீண்டும் வருகிறானா என்பதை கண்காணிக்கும் வகையில், நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பியுள்ளது.


தேவாரப்பதிகம் பாடியவர்கள் :

திருநாவுக்கரசர், சம்பந்தர்

சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித் தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே சேர்ந்தவன் உறைவிடம் திருவல்லமே.





ஸ்தல சிறப்பு :

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பியுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 242 வது தேவாரத்தலம் 
ஆகும்.


ஸ்தலபெருமை:
   
 
முழு முதற்கடவுளான விநாயகர் "அம்மையப்பன் தான் உலகம்', "உலகம் தான் அம்மையப்பன்' என உலகிற்கு அறிவித்த தலமே திருவல்லம். வலம்' வந்ததை உணர்த்துவதால், திருவலம்' என்றாகி, நாளடைவில் திருவல்லம்' ஆயிற்று.


இங்குள்ள தலவிநாயகர் "கனிவாங்கிய பிள்ளையார்' என அழைக்கப்படுகிறார். அதற்கேற்றாற் போல் துதிக்கையில் மாங்கனியை வைத்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.


தன் வாகனமான பெருச்சாளியின் மீது அமர்ந்திருப்பது காண்பதற்கரிய சிறப்பம்சமாகும். முருகனுக்கும், விநாயகருக்கும் சிவன் வைத்த போட்டியில் வென்ற விநாயகர் ஞானப்பழத்துடன் இத்தலத்தில் வந்து அமர்ந்ததாக வரலாறு. எனவே, இவரை வணங்குவோர் பிறப்பற்ற நிலையை அடைவர். இத்தல முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.


சுவாமி சன்னதியின் வலது பக்கம் தொட்டி போன்ற அமைப்பில் ஜலகண்டேஸ்வரர் என்னும் பாதாளேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.


மழை வேண்டி இவருக்கு வழிபாடு செய்யப்படுகிறது. சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களுல் இதுவும் ஒன்று. சனகர் சமாதி: வில்வநாதேஸ்வரருக்கு நேர் எதிரில் நந்திக்கு நடுவில் தெட்சிணாமூர்த்தியின் சீடரான சனகரின் சமாதி உள்ளது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் நிவர்த்தி ஆகிறது என்று கூறுவார்கள்.




சிவானந்த மவுன குரு சுவாமி இங்குள்ள பலா மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து இறைவனின் அருள் பெற்றுள்ளார். இவருக்கு கோயில் அருகே தனி மடம் உள்ளது. கஞ்சன் மலையிலுள்ள சுயம்புலிங்கங்களுக்கு பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.



கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க வில்வநாதேஸ்வரர், தைப்பொங்கல் கழித்த 3ம் நாள், கஞ்சனின் உடலுறுப்புகள் விழுந்த எட்டு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு எழுந்தருளி, கஞ்சனுக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.


திருவிழா:
 
  மாசி மாதம் அமாவாசை கழிந்த 5வது நாள் பஞ்சமியில் கொடியேற்றி பிரம்மோற்ஸவம் நடக்கிறது.
 

பொது தகவல்:
 
 
5 ஏக்கர் நிலப்பரப்பில் 7 நிலை ராஜ கோபுரம், மூன்று பிரகாரம் என பிரமாண்டமான கோயிலாக விளங்குகிறது.


உள் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், பெருமாள், சுப்பிரமணியர், சகஸ்ரலிங்கம், மீனாட்சிசுந்தரர், பைரவர், சூரியன், பாதாளேஸ்வரர் சன்னதிகளும், கிழக்கு நோக்கி மிகப்பெரிய நந்தியும் காட்சியளிக்கின்றன.


 பிரார்த்தனை
 
 
சிவனின் பெயர் வில்வநாதேஸ்வரர் என்பதால் இங்கு பிரசாதமாக வில்வம் தரப்படுகிறது.


இதை சாப்பிட்டால் மந்த புத்தி நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தோல் சம்பந்தப்பட்ட நோய் நீங்கும், ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.



நேர்த்திக்கடன்:
 
  சுவாமி, அம்மன் இருவருக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபடுதல்.



கோவில் விவரங்கள் :

மூலவர்                          :      வில்வநாதேஸ்வரர்
 
அம்மன்/தாயார்          :     வல்லாம்பிகை

தல விருட்சம்                 :     வில்வம்

தீர்த்தம்                         :     நீவாநதி, கவுரி தீர்த்தம்.

ஆகமம்/பூஜை                 :     சிவாகமம்

பழமை                                 : 1000-2000 வருடங்களுக்கு முன்

 புராண பெயர்                 : திருவல்லம்

 ஊர்                                 : திருவலம்

 மாவட்டம்                        :  வேலூர்

 மாநிலம்                        :          தமிழ்நாடு

அமைவிடம் :

வேலூரிலிருந்து, ராணிப்பேட்டை செல்லும் வழியில் 16 கி.மீ., தொலைவில் திருவல்லம்(திருவலம் ) அமைந்துள்ளது. 

ஒம் நம சிவாய ஒம் நம சிவாய ஒம் நம சிவாய

No comments:

Post a Comment