அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்-காஞ்சிபுரம்
ஸ்தல வரலாறு :
பண்டாசுரன் என்ற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும் பெற்றிருந்தான். ஆனாலும், அனைவருக்கும் மரணம் உண்டு என்ற பொதுவிதியின் அடிப்படையில், அவனுக்கு ஒன்பது வயது பெண்குழந்தையால் தான் மரணம் நிகழும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
அவனால் தேவர்களுக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டதால், அன்னை பராசக்தி காமாட்சியாக அவதாரம் எடுத்து, அவனை அழித்து இத்தலத்தில் எழுந்தருளினாள். கோபமாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஏற்படுத்தி, உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினார்.
பாடியவர்கள்:
ஆதிசங்கரர்.
ஸ்தல சிறப்பு:
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.
தலபெருமை:
துர்வாச முனிவரால் கிருதயுகத்தில் இரண்டாயிரம் சுலோகங்களாலும், பரசுராமரால் திரேதாயுகத்தில் ஆயிரத்து ஐநூறு சுலோகங்களாலும், தவுமியாசார்யாரால் துவாபரயுகத்தில் ஆயிரம் சுலோகங்களாலும், ஆதிசங்கரரால் கலியுகத்தில் ஐநூறு சுலோகங்களாலும் பாடப்பட்ட பெருமை காமாட்சிக்கு உண்டு. இங்கே அம்பிகைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவற்றை ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்று கூறுவார்கள். பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் "காமகோடி காமாட்சி' என அழைக்கப்படுகிறாள். காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோயில்களும் காமாட்சி கோயிலை நோக்கியே அமைந்திருக்கிறது.
இவ்வூரில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள் கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள்.
மகாவிஷ்ணுவின் 108 திருப்பதிகளில் ஒன்றான கள்வர் பெருமாள் சன்னதி காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தின் அருகிலேயே இருப்பது சிறப்பான அம்சமாகும்.
இந்த கோயிலின் விசேஷ அம்சம் துண்டீர மகாராஜா சன்னதி ஆகும். இங்கு ஆட்சி செய்த ஆகாசபூபதி என்ற அரசனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவன் காமாட்சியை நாள்தோறும் மனமுருகி வழிபட்டு வந்தான். இவனது பக்திக்கு மகிழ்ந்த அம்மன் தனது மகன் கணபதியையே மன்னனுக்கு மகனாக கொடுத்தாள். கணபதியும் மன்னரின் குடும்பத்தில் துண்டீரர் என்ற பெயருடன் அவதரித்தார். ஆகாசராஜனுக்கு பிறகு துண்டீரரே ஆட்சியும் செய்தார்.
துண்டீரர் ஆட்சி செய்த காரணத்தினால் தான் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. துண்டீர மகாராஜா அம்மனை வணங்கிய நிலையில், காமாட்சி சன்னதிக்கு எதிரே உள்ளார். இவரை வணங்க செல்லும் போது மவுனமாக செல்ல வேண்டும். பேசிக்கொண்டு சென்றால் அம்மனை தரிசித்த பலனை இழப்பதுடன் துண்டீர மகாராஜாவின் சாபத்திற்கும் ஆளாக நேரிடும்.
சக்தி பீடத்தில் மிக முக்கியமான தலம். அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாக கொண்டும், நான்கு கைகளுடனும் காட்சிதருகிறாள். கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப வானம், கரும்புவில் ஏந்தியிருக்கிறாள். காமாட்சிக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய பெயர்களும் உண்டு.
கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி உள்ளது பலர் பார்த்திராத ஒன்று.
காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும் காமாட்சி கோயிலை தவிர அங்கெல்லாம் வேறு அம்பாள் சன்னதி கிடையாது.
கிருதயுகத்தில் 2000 சுலோகங்களால் துர்வாசராலும், திரேதாயுகத்தில் 1500 சுலோகங்களால் பரசுராமராலும், துவாபர யுகத்தில் 1000 சுலோகங்களால் தௌம்யா சார்யாரும், கலியுகத்தில் 500 சுலோகங்களால் மூகசங்கரரும் பாடிய பெருமை காமாட்சிக்கு உண்டு. இந்த ஆலயத்தில் ஞான சரஸ்வதி ,லட்சுமி, அரூப லட்சுமி, சியாமளா, வாராஹி, அன்னபூரணி, அர்த்தநாரீ ஸ்வரர், தர்மசாஸ்தா, துர்வாச முனிவர், ஆதிசங்கரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.
இங்குள்ள பெருமாள் கள்வன் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலுக்குள் உள்ள இவரது சன்னதி 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிற சிறப்பு பெற்றது.
இவ்வாலயத்தினுள் முதல் பிரகாரத்தின் மத்தியில் உள்ள காயத்ரி மண்டபத்தின் மத்தியில்தான் காமாட்சி அம்மன் வீற்றிருக்கிறாள். இம்மண்டபத்தினுள் 24 ஸ்தம்பங்கள் (தூண்கள்) உள்ளன.24 அட்சரங்கள் 24 தூண்களாக காட்சியளிப்பது இங்கு சிறப்பு.இதேநிலையில் இதே போல் மண்டபத்தின் கீழே இருப்பதாவும் ஐதீகம். அதனால் தான் விவரம் அறிந்தவர்களாக இருப்பின் காயத்ரி மண்டபத்திற்குள் சென்று நின்று வணங்கமாட்டார்கள். காரணம் அம்பாள் மீதே நிற்ககூடாது என்ற அச்சம் தான் என்றும் கூறுகின்றனர்.
துர்வாசர் இவர் சிறந்த தேவி பக்தர். லலிதாஸ்தவரத்னம் என்ற நூலை இயற்றியவர். இவரே இப்போதுள்ள அம்மனின்மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தவர். அம்மன் முதன்முதலில் காட்சி தந்ததும் இவருக்கே.
இது அம்மனின் எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் ஆதிசங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சியில் ஒரு காலத்தில் அம்மன் மிக உக்கிரமாக விளங்கினாளாம். ஆகையால் இந்த ஸ்ரீ சக்கிரத்தை பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினாராம். இவருக்கு இக்கோயிலில் தனி சன்னதி உண்டு. இங்கு காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி, பங்காரு காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவர் காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் உள்ளனர்.
காமாஷி தத்துவம் :
காம என்னும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாஷி. கா என்றால் ஒன்று. ம என்றால் ஐந்து. ஷி என்றால் ஆறு. அதாவது ஐந்து திருநாமங்களையும் சக்தி பேதம் மூன்று. சிவபேதம் இரண்டு, விஷ்ணு பேதம் ஒன்று என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவள். மற்றும் கா என்றால் சரஸ்வதி. மா என்றால் மகேஸ்வரி. ஷி என்றால் லட்சுமி. இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள்
காமக் கடவுளாகிய மன்மதனிடம் தான் கரும்பும் புஷ்ப பாணமும் இருக்கும்.இவை இரண்டையும் காமாட்சி வைத்திருப்பதன் காரணம் மன்மதன் ஜீவன்களிடையே இந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு அடங்காத காம விகாரத்தை உண்டாக்கி வரும்படி அவனுக்கு அச்சக்தியை அளித்திருக்கிறாள். பக்தர்களிடமும் ஞானிகளிடமும் உன் கை வரிசையை காட்டதே என்று மன்மதனிடம் கூறி அவனிடமிருந்து கரும்பையும் புஷ்ப பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு விட்டாள் தேவி என்றும் காஞ்சி பெரியவர் கூறுகிறார்.
பொது தகவல்:
காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் அன்னபூரணி சன்னதி உள்ளது. ஐப்பசி மாதம் இங்கு அன்னாபிஷேகம் நடக்கும். இந்த சன்னிதானத்தில் தர்ம துவாரம், பிக்ஷத்துவாரம் உள்ளது.
அம்பிகையை வணங்கி பிக்ஷத்துவாரத்தின் வழியாக "பவதி பிக்ஷாம் தேஹி'' என கையேந்தி பிச்சை கேட்க வேண்டும் என்பது விதி. இப்படி செய்து வழிபட்டால் அம்பாள் நம்மை எவ்வித சிரமமும் இன்றி உணவு கொடுத்து காப்பாற்றுவாள் என்பது நம்பிக்கை.
பிரார்த்தனை
இத்தலத்தில் உள்ள அம்மன் பக்தர்களை தன் குழந்தைகளைப் போல் பார்ப்பதால் வேண்டிய வரங்கள் எல்லாமே கொடுத்தருள்கிறாள்.
அம்மனை வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யமான வாழ்வும் மனநிம்மதியும் ஏற்படுகிறது. இங்கு வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தவிர திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். இத்தலத்து அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சம் புகுந்திருப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோசம் ஏற்படுவதில்லை. எனவே நவகிரக தோசம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடல் நலம்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தசரத சக்கரவர்த்தி இந்த ஸ்தம்பத்தை சுற்றி வந்ததால் தான் ராமர், லட்சுமணர் பிறந்தனர் என்று கூறப்படுவதுண்டு.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு புடவை சாத்துதல் , அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்
கோவில் விவரங்கள் :
மூலவர் : காமாட்சி அம்மன்
தல விருட்சம் : செண்பகம்
தீர்த்தம் : பஞ்ச கங்கை
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : காஞ்சி
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
அமைவிடம் :
காஞ்சிபுரம் நகரின் மத்தியில் கோவில் அமைந்துள்ளது
No comments:
Post a Comment