அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்-காஞ்சிபுரம்
நட்சத்திர கோவில்கள் :
நட்சத்திரம் : ரோகினி
பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் கவுரவர்களிடம் தன் நாட்டை இழந்தார். ஆளுக்கொரு வீடு வீதம் ஐந்து வீடுகளையாவது கேட்டுவாங்க, துரியோதனனிடம் தூது சென்றார் பகவான் கிருஷ்ணர். அவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். கிருஷ்ணர் அமர்வதற்காக போடப் பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு பெரிய நிலவறையை (பாதாளம்) உண்டாக்கி அதன்மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கிருஷ்ணனும் அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்தது, கிருஷ்ணரும் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்கினர் சில மல்யுத்த வீரர்கள். அவர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார். பாண்டவர்களுக்காக தூது சென்ற இவரை பாண்டவதூத பெருமாள் என்பர்.
பாரத யுத்தம் முடிந்து வெகுகாலத்திற்கு பின், ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக்கதையை கேட்க வந்தார்.கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள், என ரிஷியிடம் மன்னர் வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார். பெருமாள், தன் தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.
மங்களாசாசனம் பாடியவர்கள் :
பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
நின்ற தெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து அன்று வெஃகணை கிடந்தது எண்ணிலாத முண்ணெலாம் அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன் நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுள்ளே.
-திருமழிசையாழ்வார்.
ஸ்தல சிறப்பு:
கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில் , மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும்.
ஸ்தல பெருமை :
கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். பெருமாளின் சிலை 25 அடி உயரம் உள்ளது. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவரை, இங்குள்ள கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிப் பிட்டுள்ளனர். கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளுகிறார். எனவே இங்கு அடிப் பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர் களுக்கு துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார்.
எட்டாம் தேதி விசேஷம்:
ரோகிணி தேவி, இத்தலத்து பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில் ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவிகளை மணந்தார். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த பெருமாளை, இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வணங்க வருவதாக ஐதீகம். எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன், சனிக்கிழமை, அஷ்டமி திதி, 8ம் தேதிகளில் இங்கு வழிபாடுசெய்வது சிறந்த பலனைத்தரும்.
திருவிழா:
கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம். அருளாளப்பெருமாள் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் நடக்கிறது.
பொது தகவல்:
ரோகிணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கற்றறிந்தவர்களுடன் நட்பை விரும்புபவராகத் திகழ்வர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் ஊர் சுற்றும் இயல்பைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த நம்பிக்கை உண்டு. இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு இருக்கும். மக்கள் செல்வாக்கு சிறப்பாக இருக்கும். மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை :
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
கிருஷ்ணன் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலம். எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72,000 அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு.
கோவில் விவரங்கள் :
மூலவர் : பாண்டவ தூதர்
அம்மன்/தாயார் : சத்யபாமா, ருக்மணி
தீர்த்தம் : மத்ஸ்ய தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பாடகம்
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
அமைவிடம் :
காஞ்சிபுரம் மத்தியில் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.
காஞ்சிபுரம் மத்தியில் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment