Wednesday, February 5, 2014

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்-எண்கண் (திருவாரூர் மாவட்டம் )



அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்-எண்கண் 
(திருவாரூர் மாவட்டம் )


 நட்சத்திர கோவில்கள் :

நட்சத்திரம் : மிருக சீரிடம்

ஸ்தல வரலாறு :

ஒருமுறை பிருகு முனிவர் சமீவனம்(வன்னிமரக்காடு) என அழைக்கப்பட்ட இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் இருந்தார். அப்போது சோழ அரசர் ஒருவர் தன் படைகளுடன் பெரும் குரல் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட வந்தார். இந்த சப்தத்தினால் முனிவரின் தவம் கலைந்தது. கோபமடைந்த முனிவர், அரசனை நோக்கி,முனிவர்கள் தவம் செய்யும் இந்த வனத்தில் சிங்கத்தை வேட்டையாட வந்து, தவத்தைக் கலைத்தாய். எனவே நீ சிங்க முகத்துடன் அலைவாய்,என சாபமிட்டார். வருந்திய மன்னன், தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாடினார். மனம் இரங்கிய முனிவர், விருத்த காவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபாடு செய்து வரும்படி கூறினார். அரசனும் மனமுருகி வழிபாடு செய்து வந்தான். மகிழ்ந்த பெருமாள் கருட வாகனத்தில் காட்சி தந்தார். பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகம் கிடைத்தது. இதன்காரணமாக இத்தலம் மிருகசீரிட நட்சத்திரத்திற் குரிய கோயிலாக போற்றப்படுகிறது.

மிருகசீரிட சக்திகள் நிறைந்த எண்கண் தலத்தில், தைப்பூசத்தன்று விருத்த காவேரி எனப்படும் வெட்டாற்றில் நீராடி வழிபாடு செய்து வரவேண்டும். கருடன்மீது பெருமாள் அமர்ந்து காட்சி அளிக்க, மயில்மீது மால் மருகன் முருகனும் காட்சி அளிக்கும்போது உனது சாபம் நீங்கும் என்று முனிவர் கூறினார். மேலும், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், மேஷ வாகனம் போன்ற 108 வித வாகனங்கள் செய்து இறைவனுக்குப் பெருவிழா நடத்த வேண்டும் என்றும் நல்வழி காட்டினார். முனிவர் கூறியவாறே மன்னன் பூஜைகள் நிகழ்த்தி இறைப்பணிகள் செய்து நல்லருளைப் பெற்று சிங்க முகம் நீங்கப் பெற்றான்.




ஸ்தல சிறப்பு :

பொதுவாக பெருமாள் கோயில்களில், பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள்பாலிப்பார். அவரது எதிரிலோ, அருகிலோ கருடாழ்வார் இருப்பார். திருவிழாக்காலங்களில் பெருமாள் கருடன் மீது எழுந்தருளி கருட சேவை சாதிப்பபார். ஆனால் இத்தலத்தில் பெருமாள் அரசனுக்கு உடனடியாக அருள்பாலிப்பதற்காக கருடவாகனத்தில் வந்ததால், மூலஸ்தானத்திலும் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். எனவே பெருமாளுக்கு இத்தலத்தில் நித்யகருட சேவைசாதிக்கப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை காண்பது அரிது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.




ஸ்தல பெருமை :


மிருகண்டு மகரிஷி இத்தல பெருமாளை தினமும் அரூப வடிவில் வழிபடுவாதக கூறப்படுகிறது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது மிருகசீரிட நட்சத்திரத்தன்றோ இத்தல பெருமாளை வழிபாடு செய்தால், உடனே கருட வாகனத்தில் ÷தான்றி நம்மை காப்பார் என்பது ஐதீகம். உற்சவர் ஆதிநாராயணப்பெருமாள் பிரயோகச்சக்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள், நல்ல சம்பளத்துடன் கூடிய உயர்பதவி வேண்டுபவர்கள், புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.





நித்ய கருட சேவை :
 பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள்பாலிப்பது வழக்கம். எதிரில் அல்லது அருகில் கருடாழ்வார் இருப்பார். திருவிழாக்காலங்களில் கருடன் மீது எழுந்தருளி சேவை சாதிப்பார். ஆனால், இங்கு கருடன் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதுபோன்ற அமைப்பை காண்பது அரிது. பெருமாளின் நித்யகருட சேவையை தினமும் இங்கு தரிசிக்கலாம். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று. இத்தல பெருமாளை வழிபாடு செய்தால்,அவர்களின் பிரச்னை உடனடியாகத் தீரும் என்பது நம்பிக்கை. கருட பகவானும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது இம்மூர்த்தியின் சிறப்பாகும். மூலவர் தனித்தும், உற்சவர் ஸ்ரீபூமி, நீளாதேவி சமேத நாராயணப் பெருமாளாகவும் காட்சி அளிக்கிறார்.




பொது தகவல்:
   
  மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: விசாலமான புத்தியும், கூர்மையான அறிவும், திறமையும் பெற்றிருப்பர். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும். மனதில் தைரியம் குடி கொண்டிருக்கும். சிலருக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். தானதர்மம் செய்வதில் ஆர்வம் காட்டுவர். பிறரின் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்கும் இயல்பைப் பெற்றிருப்பர். பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், அனுமன், கருடன் சன்னதி உள்ளது. திருவாரூர் தியாகராஜர், திருக்கண்ணமங்கை, நாச்சியார் கோவில், திருச்சேறை ஆகிய கோயில்கள் இத்தலத்தின் அருகில் உள்ளன.  
   



பிரார்த்தனை
   
  மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், நாக தோஷம், பட்சி தோஷம் உள்ளவர்கள் , தோல் நோயால் பாதிக்கப்பட்வர்கள், பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அடிக்கடி மரண சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள், பவுர்ணமி மற்றும் மிருகசீரிட நாட்களில் இங்கு வழிபாடு செய்கிறார்கள். படிப்புக் கேற்ற வேலை கிடைக்காதவர்கள் புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.  
   

நேர்த்திக்கடன்:
   
  ஸ்ரீஆதிநாராயணப் பெருமாளுக்கு தேன் கலந்த சர்க்கரைப் பொங்கல், அதிரசம், பால் பாயசம் போன்ற இனிப்பு வகைகள் நிவேதனம் செய்யப்படுகின்றன.



கோவில் விவரங்கள்:


மூலவர்                         :         ஆதிநாராயணப்பெருமாள்

உற்சவர்                         :        ஆதிநாராயணப்பெருமாள்

அம்மன்/தாயார்         :        ஸ்ரீதேவி, பூதேவி

தல விருட்சம்                 :        வன்னி
 
ஆகமம்/பூஜை         :       வைகானஸம்

பழமை                         :       1000-2000 வருடங்களுக்கு முன்

 புராண பெயர்                 :       சமீபனம் வன்னிமரக்காடு

 ஊர்                                 :       எண்கண்

 மாவட்டம்                 :      திருவாரூர்

 மாநிலம்                      :      தமிழ்நாடு



அமைவிடம் :

தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்த ஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் எண்கண்ணிலுள்ள கோயிலை அடையலாம்.

No comments:

Post a Comment